Thursday, October 8, 2009

மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?


மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.



மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.

மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது. (திருக்குர்ஆன் 2:219)

மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி : உணர்வு

மாவீரனுக்கு விடுதலை!


காலில் கிடக்கும் ஒரு செருப்பு கூட ஒரு சாம்ராஜ்யத்தை தகர்க்கும் ஆயுதம் என நிருபித்து, ஜார்ஜ் புஷ்ஷின் பிரியாவிடை பரிசாக செருப்படி கொடுத்த முன்தாதிர் ஜெய்தி கடந்த வாரம் விடுதலை பெற்றுள்ளார். அவருக்கு 15 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அவருக்கு மாறுகால் மாறு கை வாங்கப் பட்டுவிட்டது என்றும் வந்த வதந்திகளுக்கு மத்தியில் அவ்வீரன் விடுதலை பெற்றுள்ளான். அவர் போலீஸ் மற்றும் ராணுவத்தால் கடுமையான துன்புறுத்தலுக்குள்ளானார் என்று செய்திகள் வெளியானாலும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் நேரிலும் இலட்சக்கணக்கான மக்கள் இதயத்தாலும் அவரை வரவேற்ற போது பட்ட துயரங்கள் எதுவும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திடவில்லை என்பதை உணர முடிந்தது.


யார் என்ன சொன்னாலும் நான் செய்தது சரியானதே! என்னால் முடிந்ததை நான் செய்தேன், ஈராக்கில் கணவனையும் குழந்தைகளையும் இழந்து தவிக்கும் தாய்மார்களின் பிரதிபலிப்பை தான் நான் எதிரொலித்தேன்' உடைந்த பல்லுகளுடன் வெளிவந்த முன்தாதிர் ஜெய்தி கூறிய வாக்குகள் இவை. அவருடைய பற்கள் உடைந்திருக்கலாம், ஆனால் ஜார்ஜ் புஷ்ஷோ என்றென்றைக்கும் தலைநிமிர முடியாத அளவிற்கு அவமானத்தை பெற்றுக்கொண்டாரல்லவா அதற்கு முன் இது சாதாரணமே! ஏனென்றால் தன்னால் இயலவில்லையே என ஏங்கும் உலக மக்களின் முன்னால் இன்று இவர் ஒரு ஹீரோ.

நான் ஆவேசத்தால் அதை செய்துவிடவில்லை. உலக மனச்சாட்சிக்கு முன்னால் நான் வைத்த கேள்விகள் அவை. இன்று ஈராக் சின்னாபின்ன மாக்கப்பட்டு விட்டது. சதாம் உசேன் காலத்தில் இந்நாடு இவ்வாறு இருக்கவில்லை. கடுமையான யுத்த குற்றங்கள் நடக்கின்றன. 2007 கணக்கின் படி 12 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவும் கூட்டு நாடுகளும் உலக அனுமதியுடன் நடத்திய வேட்டையில் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அப்பாவிகள் குரூரமாக கொல்லப்படுகின்றனர். உலக நாகரீகத்தின் முன்னோடியாக திகழ்ந்த ஈராக் இன்று ஒரு சவக்கிடங்கு. ஈராக் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானும் அப்படித்தான். அமெரிக்காவுக்கு 40 நாடுகளில் 865 இராணுவ தளங்கள் எதற்காக? 46 நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் வெவ்வேறு காரணங்களைக் கூறி நுழைந்திருப்பது எதற்காக? வருடந்தோறும் இருபத்தைந்தாயிரம் கோடி டாலர் செலவு செய்து பூமி முழுவதும் இராணுவத்தை அனுப்புவது எதற்காக? முன்தாதிர் விடை தேடும் கேள்விகள் இவை.

ஆயுத வியாபாரமும் இனவெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட இந்த சிறுபான்மையினர் உலகையே அடக்கிஆளும் போது அவற்றை எதிர்ப்பது முன்தாதிர் ஜெய்தி எறிந்தது போன்ற ஷூக்கள் மட்டுமே. அவருக்கு இருந்த துணிச்சல் மற்றும் தைரியத்தில் பத்திலொரு பங்கேனும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இன்று இவ்வுலகு இரத்தக்காடாக மாறியிராது. அனுபவம் ஆட்சியாளர்களை திருத்த வேண்டும். இல்லையேல் அக்கிரமமே கோலோச்சும்.

நன்றி : உணர்வு

Tuesday, October 6, 2009

இந்திய அமைதிக்கு குந்தகம் செய்யும் அமெரிக்கா

மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை சொல்லும் போது அது உண்மை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது கோயபல்ஸ் தத்துவம் எனப்படும். இந்த தத்துவத்தை பயன்படுத்தி ஈராக்கை அபகரித்த அமெரிக்கா தற்போது அதே தத்துவத்தை இந்தியாவிலும் புகுத்தி வருகிறது.


ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என ஆரம்பத்தில் அமெரிக்கா கூறிய போது அதை உலகம் அலட்சியம் செய்தது. ஏனெனில் பொருளாதார தடை விதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு நல்ல போர் விமானம் கூட இல்லாத ஒரு நாட்டில் அணு ஆயுதமோ இராசாயன ஆயுதங்களோ எவ்வாறு இருக்க முடியும் என்பது தான் அதற்கு காரணம். ஆனால் அங்கு இரசாயன ஆயுதம் இருக்கிறது என்று திரும்ப திரும்ப அமெரிக்கா கூறிய போது உலக நாடுகளுக்கிடையில் இருக்குமோ என்ற ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா அங்கு அணு ஆயுதம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. பின் அதிலிருந்து மக்களை காப்பதாக கபட நாடகம் ஆடி அந்நாட்டை சின்னாபின்னமாக்கி வருகின்றது.

அதுபோலவே தற்போது இந்தியாவை ஒரு தீவிரவாத நாடு எனக் கூறுவதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டுகிறது. இந்திய நாட்டின் ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க இருப்பதாக கதை கட்டி அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்துவது போல் இந்தியாவை அவமானப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று கூட அமெரிக்க வெளியுறவுத்துறை வேண்டுகோள் வைத்தது.

தற்போது இந்தியாவில் ரமலான், தசரா, தீபாவளி போன்ற தொடர்;ச்சியான பண்டிகைகள் வந்து கொண்டிருப்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அதனால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு பயங்கரவாதியும் பண்டிகை காலங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால் உலக பயங்கரவாதியான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தான் முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது எவ்வித காரணமுமின்றி சதாம் உசேனை தூக்கிலிட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்.

அடுத்ததாக, அமெரிக்கா திரும்ப திரும்ப நம் நாட்டை தீவிரவாத நாடாகவே அறிவித்துக் கொண்டிருக்க நம்மவர்களோ மௌனிகளாகவே இருக்கின்றனர். கோயபல்ஸ் தத்துவத்தை மீண்டும் மீண்டும் கூறி தன்னுடைய கருத்தை அமெரிக்கா உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது அதற்கு நாம் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆட்சிபீடம் அமெரிக்க நிழலாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளும் சமுதாய ஆர்வலர்களும் அமெரிக்காவின் இந்த போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டும். இல்லையேல் பொய்க்காரணங்களைக் கூறி நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தனது இராணுவத்தை ஊடுருவச்செய்துள்ள அமெரிக்கா, பாதுகாப்பு எனும் பெயரில் இந்தியாவிற்குள்ளும்; நுழைய முயற்சி செய்யும். இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கலாகாது.

நன்றி : உணர்வு

Sunday, October 4, 2009

சீனாவில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சி!

உலகெங்கிலும் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதை தடுக்க அல்லது கட்டுக்குள் கொண்டு வர மேற்குலக ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூற, அது உண்மையாகிவிடும் எனும் கோயபல்ஸ் தத்துவத்தை போன்று இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக அவதூறு பிரச்சாரங்களை செய்தும் வருகின்றது. அதையும் மீறி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் கொள்கையாக ஏற்பவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் அவை தயங்குவதில்லை. இந்த பாணியில் மேற்குலகம் செயல்பட, சீனா இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. சீனாவில் இஸ்லாம் வெகு வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் இதை ஜீரணிக்க இயலாத சீன அரசு முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்து விட்டுள்ளது.

சிங்கியாங்கின் தலைநகரான உரும்கியில் முஸ்லிம்கள் 90 சதவீதம் வசித்து வந்தனர். ஆனால் சீன அரசு திட்டமிட்டு அங்கு ஹன்சீனர்களை குடியமர்த்தியது. அங்கு நான்கில் மூன்று பங்கு சீனர்களை அவ்வாறு குடியமர்த்தி ஹன்சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரத்தை ஏற்படுத்தியது. கலவரத்திலும் கலவரத்திற்கு பின்னரும் முஸ்லிம்களே பாதிக்கப்பட்டனர். பாதிப்படைந்த முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் போராடினாலும்; அரசால் அடக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் தடை செய்யப்பட்டனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மாகணங்களில் அரசு வலுக்கட்டாயமாக சீனர்களை திணித்ததால் 41 சதவிகித ஹன்சீனர்கள் அவ்விடங்களில் குடியேற்றப்பட்டு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இவ்வாறு சீனா, முஸ்லிம்களிடத்தில் கடும் போக்கை கடைபிடித்து வந்தது. அதன் காரணமாக அன்றாட அலுவலுக்கு தடை ஏற்படுமளவிற்கு அங்கு புரட்சி ஏற்பட்டுள்ளது. அதை அடக்கும் எண்ணத்துடன் இஸ்லாமியர்களுக்குள் கடும் கட்டுப்பாட்டை சீன அரசு விதைத்தாலும் அது கட்டுக்கடங்காமல் போவது ஒருபுறமிருக்க, மறுபுறமோ சீனர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற வண்ணமிருக்கின்றனர்.

சீனாவில் மட்டுமின்றி சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா வருபவர்களும் வேலை நிமித்தம் வருவபர்களும் இஸ்லாத்தை படித்தவுடன் அதில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சீனர்களின் இந்த இஸ்லாமிய வரவு சவுதி அரேபியாவில் மிகவும் அதிகரித்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. மினா, அரஃபா, முஸ்தலிஃபா வுக்கிடையேயான ரயில்வே திட்டத்தை ஏற்று செயல்படுத்திவரும் சீனக்கம்பெனியின் மேலாளர் உட்பட 17 பேர் கடந்த வாரம் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பு இதே குழுவை சார்ந்த 660 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனப்பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அங்கு இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டதாலும் சீன அரசு முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதாலும் சவுதி அரேபியாவுக்கு வரும் சீனர்கள் இஸ்லாத்தின் யதார்த்த நிலையை புரிந்தவுடன் அதை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு சீனாவை விட்டு வெளிவரும் சீனர்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்பது சீன அரசுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா இஸ்லாமிய மயமாகி வருகின்றது என போப் ஆண்டவர் ஒருபுறம் கவலையோடு கூற, இன்னொரு புறம் ஆசிய நாடுகளும் இஸ்லாமிய மயமாவது சீனா போன்ற ஆதிக்க ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை இது உண்மைப்படுத்துகிறது.

நன்றி : உணர்வு