Tuesday, October 6, 2009

இந்திய அமைதிக்கு குந்தகம் செய்யும் அமெரிக்கா

மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை சொல்லும் போது அது உண்மை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது கோயபல்ஸ் தத்துவம் எனப்படும். இந்த தத்துவத்தை பயன்படுத்தி ஈராக்கை அபகரித்த அமெரிக்கா தற்போது அதே தத்துவத்தை இந்தியாவிலும் புகுத்தி வருகிறது.


ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என ஆரம்பத்தில் அமெரிக்கா கூறிய போது அதை உலகம் அலட்சியம் செய்தது. ஏனெனில் பொருளாதார தடை விதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு நல்ல போர் விமானம் கூட இல்லாத ஒரு நாட்டில் அணு ஆயுதமோ இராசாயன ஆயுதங்களோ எவ்வாறு இருக்க முடியும் என்பது தான் அதற்கு காரணம். ஆனால் அங்கு இரசாயன ஆயுதம் இருக்கிறது என்று திரும்ப திரும்ப அமெரிக்கா கூறிய போது உலக நாடுகளுக்கிடையில் இருக்குமோ என்ற ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா அங்கு அணு ஆயுதம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. பின் அதிலிருந்து மக்களை காப்பதாக கபட நாடகம் ஆடி அந்நாட்டை சின்னாபின்னமாக்கி வருகின்றது.

அதுபோலவே தற்போது இந்தியாவை ஒரு தீவிரவாத நாடு எனக் கூறுவதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டுகிறது. இந்திய நாட்டின் ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க இருப்பதாக கதை கட்டி அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்துவது போல் இந்தியாவை அவமானப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று கூட அமெரிக்க வெளியுறவுத்துறை வேண்டுகோள் வைத்தது.

தற்போது இந்தியாவில் ரமலான், தசரா, தீபாவளி போன்ற தொடர்;ச்சியான பண்டிகைகள் வந்து கொண்டிருப்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அதனால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு பயங்கரவாதியும் பண்டிகை காலங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால் உலக பயங்கரவாதியான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தான் முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது எவ்வித காரணமுமின்றி சதாம் உசேனை தூக்கிலிட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்.

அடுத்ததாக, அமெரிக்கா திரும்ப திரும்ப நம் நாட்டை தீவிரவாத நாடாகவே அறிவித்துக் கொண்டிருக்க நம்மவர்களோ மௌனிகளாகவே இருக்கின்றனர். கோயபல்ஸ் தத்துவத்தை மீண்டும் மீண்டும் கூறி தன்னுடைய கருத்தை அமெரிக்கா உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது அதற்கு நாம் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆட்சிபீடம் அமெரிக்க நிழலாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளும் சமுதாய ஆர்வலர்களும் அமெரிக்காவின் இந்த போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டும். இல்லையேல் பொய்க்காரணங்களைக் கூறி நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தனது இராணுவத்தை ஊடுருவச்செய்துள்ள அமெரிக்கா, பாதுகாப்பு எனும் பெயரில் இந்தியாவிற்குள்ளும்; நுழைய முயற்சி செய்யும். இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கலாகாது.

நன்றி : உணர்வு

No comments: