Saturday, May 23, 2009

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 21

பகுத்தறிவாளர்கள் முற்றாக வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் மது பானம், போதைப் பொருட்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் போதைப் பொருட்கள் பகுத்தறிவைப் பாழாக்கும். சிந்தனையை மழுங்கச் செய்யும். மது பானங்களைத் தானும் அருந்தாமல் மற்றவர்களும் அருந்தாமல் ஒவ்வொரு பகுத்தறிவாளரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ஆனால் பகுத்தறிவின் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்தும் வீரமணி அவர்கள் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சமீபத்தில் உளறியுள்ளார். இது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பது தெரிந்திருந்தும் வீரமணி சொன்னதற்கு போலி பகுத்தறிவாளர்கள் எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை.

தனது தலைவர் எதைச் சொன்னாலும் அது எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் அதற்கு தலை ஆட்டுவோர் எவ்வாறு பகுத்தறிவாளர்களாக இருக்க முடியும்?

'மதவாதிகள் தமது முன்னோர் சொன்னதைக் கண்மூடி ஏற்றுக் கொள்கிறார்கள்' என விமர்சிக்கும் திராவிடக் கழகத்தினர் தனது தலைவர் சொல்லும் பகுத்தறிவுக்கு எதிரான கருத்தை மட்டும் கண்மூடி ஏற்றுக்கொள்ளலாமா?

குறைந்தபட்சம் பகுத்தறிவாளரின் தந்தை என இவர்களால் புகழப்படும் பெரியார் இது குறித்து சொன்னதையாவது பின்பற்ற வேண்டாமா?

இதோ பொரியார் கூறுவதைக் கேளுங்கள்.

மதுபானம்

1920 - ம் வருஷம் சென்னை ராஜதானியில் உள்ள கள்ளுக் கடைகள் 11,034. இவைகளில் விற்ற கள்ளு 11 கோடி காலன். 8 திராம் புட்டி 1 க்கு 2 அணா வீதம் 66 கோடி புட்டிக்கு கிரயம் ரூ. 8 1, 2 கோடி ஆகிறது. இதற்கு அனுகூலமாய் செலவாகும் மாமிசம், புட்டு, தோசை முதலிய உபகருவிகளுக்கு 2 கோடி ரூபாய் ஆக ரூ.10 1 ‚2 கோடி.

சென்னை ராஜதானியில் உள்ள சாராயக்கடைகள் 6,352. இவைகளில் விற்ற சாராயம் 16,75,000 காலன்கள். காலன் ஒன்றுக்கு 12 ரூ வீதம் 2 கோடியே 1 லட்சம் ரூபாய். இதற்கு மாமிசம், தோசை, புட்டு முதலிய உபகருவிகள் 25 லட்சம். ஆக இரண்டும் சேர்ந்து 12 1‚ 2 கோடி ரூபாய் செலவாகிறது.

இந்தப் பனிரண்டரைக்கோடி ரூபாய் நமது ராஜதானியில் கள், சாராயத்திற்காக 3 1‚ 2 கோடி ஜனங்களால் செலவு செய்யப்படுகிறது. இது அல்லாமல் ஏழை மக்களால் குடியின் பொருட்டு களவு - சூது - பொய் - கொலை, கொள்ளை முதலிய காரியங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு ? கோர்ட்டு, வக்கீல், லஞ்சம், சப்ளை, மாமூல் வகைகளில் ஆகும் செலவுகள் எவ்வளவு ?

மக்கள் ஒழுக்கம், கற்பு முதலிய குணங்கள் ஒழிந்து தேசத்திலும், நாட்டிலும், குடும்பத்திலும் ஏற்படும் கலகங்கள் ஒற்றுமைக் குறைவுகள் எவ்வளவு ? இவைகளுக்கு விலைமதித்தால் எந்தக் கணக்கிலடக்க முடியும்? இவ்வளவு கொடுமைகளையும் செய்வித்து வரும்படிக்காக நமது சர்க்கார் நமது மாகாணத்தில் இதனால் சம்பாதிக்கும் பொருள் எவ்வளவு என்று கணக்குப் பார்த்தால் கள்ளில் 2 கோடியே 31 லட்சமும், சாராயத்தில் 88 1‚2 லட்சமும், ஆக 3 கோடி ரூபாய் 19 1‚2 லட்சம் ரூபாய்தான்.

இதல்லாமல், கஞ்சா, அபினி, சீமைச்சாராயம் விற்கும் கணக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை. இதிலிருந்து சர்க்கார் 3 கோடி ரூபாய் சம்பாதிக்க ஜனங்கள் எவ்வளவு கஷ்டமும் நஷ்டமும் அடைய வேண்டி வருகிறது ?

தே மாதிரி இந்தியா முழுமைக்கும் 1923 - 1924 ம் வருஷத்திற்கு நமது சர்க்காருக்கு மது வியாபாரத்தில் வந்த ஆதாயம் 19,40,51,689 ரூபாய். சர்க்காருக்கு 19 1‚2 கோடி வரவேண்டுமானால் பொது ஜனங்களுக்கு மேற்படி கணக்குப்படி கள்ளும் சாராயமும் குறைந்தது 80 கோடி ரூபாய்க்குக் குறைவில்லாமல் விற்பனை ஆகியிருக்க வேண்டும். இதற்கேற்ற மற்ற சடங்குகளின் செலவையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய தொகை நாட்டின் ஷேமத்திற்கல்லாமல் நாட்டினுடையவும், ஒழுக்கத்தினுடையவும் அழிவுக்குச் செலவாகிறது என்பது விளங்கும்.

சட்டசபை மெம்பர்கள் என்று சொல்லிக் கொள்வோரும் இதற்காக என்ன செய்திருக்கிறார்கள் ? கேள்வி கேட்பதும் பத்திரிகையில் எழுதிக் கொள்ளுவதுமான காரியங்களைச் செய்து பொதுஜனங்களை ஏமாற்றிச் சர்க்காருக்கு அனுகூலம் செய்துகொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் உண்மையில் யோக்கியமான வேலை எதுவும் செய்திருக்கிறார்களா ?

சட்டசபையிலேயே குடிக்கும் மெம்பர் சில பேர்கள்; சாராயக்கடை குத்தகையெடுத்துப் பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர் ; கள்ளுக்கு மரம் குத்தகை விட்டுப் பணம் சம்பாதிக்கும் மெம்பர்கள் சிலபேர்; குடியை விளம்பரப்படுத்தி நல்ல சாராயம், டாக்டர் சிபார்சு செய்தது, உடம்புக்கு நல்லது என்று ஜனங்களைக் குடிக்கச் சொல்லிப் பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர்.

இப்பேர்ப்பட்ட சிகாமணிகளால் பெரும்பாலும் நிரப்பப்பட்ட சட்டசபை (இவைகளில் சம்பந்தப்படாத சில பேர் இருக்கலாம்) ஜனங்களுடைய பிரதிநிதிசபையென்று இப்படிப் பட்டவர்களே பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி இவைகளை ஒழிப்பதாய் அங்கு போய் உட்கார்ந்து கொண்டு தங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கும், இனத்தாருக்கும் பிழைப்புக்கு உத்தியோகம் சம்பாதிக்கப் பாடுபடுவதல்லாமல் வேறு என்ன பலனை உண்டாக்குகிறார்கள் ?

சட்டசபைகள் ஏற்பட்டு மதுபானத்தை ஒழிக்க நம்மவர்கள் பிரயத்தனப்பட்டதாக சொல்லிக் கொள்வதன் பெருமைகளைக் கீழ்க்கண்ட கணக்குகளால் தெரிந்துகொள்ளலாம். ஜனப்பிரதிநிதிகள் பெரும்பாலும் உள்ள சட்டசபை இல்லாத காலத்தில் நமது சர்க்காருக்கு இந்தியாவில் மொத்தம் கள்ளு சாராயத்தால் வரும்படி, அதாவது 1880 - 1881 வரூஷத்தில் 3 1/2 கோடி. அதற்கு வேண்டிய இலாகாக்கள் அமைத்து ஒழுங்குபடுத்தின பிறகும், சட்டசபை ஏற்பட்ட பிறகும் 6 கோடி. 1910 - ல் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தின் பிறகு 10 கோடி. 1918 - ம் வருஷத்தில் மாண்ட் போர்ட் சீர்திருத்தத்தின் பிறகு 18 1/2 கோடி. 1924 - ம் வருஷத்தில் 19 1/2 கோடி

இப்படியே நாளுக்குநாள் உயர்ந்துகொண்டு வருவதல்லாமல் குறைவுபடுவது எங்கே ? இதை நிறுத்திவிட வேண்டுமென்று சொன்னால் நமது சட்டசபை மெம்பர்களும் மந்திரிகளும் கூட இந்த வரும்படி போனால் சர்க்கார் நடைபெறாதே என்று விசனப்படுகிறார்களே அல்லாமல், தேசமும் ஜனங்களும் கெட்டுப் போகிறதே என்கிற கவலையே இவர்களுக்கு இல்லை. தவிரவும், மது வரும்படி நின்றால் ஜனங்கள் படிக்கப் பணமில்லையே என்றும் விசனப்படுகிறார்கள்.

இரண்டு பிள்ளையுள்ள தகப்பனை உன் ஒரு பிள்ளை படிக்க வேண்டுமானால் ஒரு பிள்ளை கள்ளு சாராயம் குடிக்க வேண்டும்; சம்மதமா ? என்று கேட்டால், தகப்பன் ஒரு பிள்ளை குடித்தாலும் சரி ஒரு பிள்ளை படிக்கத்தான் வேண்டும் என்று எவனாவது சொல்லுவானா ? ஒருக்காலும் சொல்ல மாட்டான்.

அதுபோலவே நமது மந்திரிகளும், சட்டசபை மெம்பர்களும், ஏழை மக்களும், தாங்களும் ஒருவருக்கொருவர் சகோதரர் என்கிற உணர்ச்சி இருக்குமானால் வெகுகாலத்திற்கு முன்பே இந்த மது வியாபாரத்தை சர்க்காரிலிருந்து ஒழித்திருப்பார்கள் அல்லது சட்டசபையை விட்டு விலகி இருப்பார்கள்.

மதுவருந்துபவர் பெரும்பாலும் ஏழைகள். சட்டசபைக்குப் போகிறவர்கள் பணக்காரரும், மதுவருந்துபவர்கள் கொடுக்கும் பணத்தால் படித்தவர்களாயுமிருப்பதால் மதுபானமென்பது அவர்களுக்கு ஒரு கவலையற்ற விஷயமாயிருக்கிறது. சட்டசபைப் பைத்தியம் இருக்கிறவர்கள் மற்றெல்லா விவகாரங்களையும் விட்டுவிட்டு மதுவிலக்கு என்கின்ற ஒரு காரியத்தில் மாத்திரம் தாங்கள் எல்லாரும் ஒன்றாயிருந்து ஒரேயடியாய் இதை ஒழிப்பது தங்கள் வேலைத்திட்டம்தான் என்கிற கொள்கையை வைத்துக்கொண்டு சர்க்காரின் அதிகச் செலவைக் குறைத்து கள்ளு வரும்படி இல்லாமலே சர்க்கார் நடக்கும்படியாக வரவு செலவு திட்டத்தைச் சரிசெய்துகொண்டு இதை சர்க்காரை ஒப்புக்கொள்ளச் செய்வோம்; ஒப்புக் கொள்ளாவிட்டால் ராணூவச் சட்டம் வந்தாலும் சரி சட்டசபையை வேறுகாரியம் பார்க்கவிடுவதில்லையென்று பிடிவாதம் செய்வதாக தீர்மானித்துக் கொண்டால் மதுபானம் நமதுநாட்டில் இன்னும் ஒழியாமல் இருக்குமா ? ஒருக்காலும் இருக்காது என்றுதான் சொல்லுவோம்.

கள் மரம் வளர்ப்பது நாம், சாராயம் காய்ச்சுவது நாம், விற்பது நாம், குடிப்பது ஏழைகள். யார் பேரில் குற்றம் சொல்வது? மரம் வளர்த்து குத்தகைக்கு விட்டுக் கடை யெடுத்து கள் விற்று, குடிகாரன் போதையில் எற்பட்ட வழக்குக்கு பீசு பெற்று வாழுபவர்கள், சட்டசபைக்குப் போனால் சர்க்கார் பேரில் குற்றம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுவார்களே அல்லாமல், தங்கள் குற்றங்களை ஒருக்காலும் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.

ஆகையால் யாராவது சட்டசபைக்குப் போவதற்காக ஏழை மக்களிடத்தில் வந்து ஓட்டுக் கேட்பார்களானால் அவர்களை சட்ட சபையில் எத்தனை தென்னை மரம் ? அதில் எவ்வளவு கள்ளுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது ? நீங்கள் எத்தனை குடிகாரர் கேசுக்கு ஆஜராகி எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் ? குடி விலக்க நீங்கள் இந்த 6 வருஷ காலமாய் சட்டசபையிலும், வெளியிலும் என்ன செய்தீர்கள்? எங்களுக்கு வேறு ஒரு நன்மையும் வேண்டாம்; குடி ஒழிந்தால் போதும்; அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்.

நீங்கள் சொல்வதை சர்க்காரார் கேட்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று இம்மாதிரியான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஏற்ற உண்மை யோக்கியர்களை ஆராய்ந்துப் பார்த்து ஓட்டர்கள் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்வார்களானால் மாத்திரம் சட்டசபையால் மதுபானம் ஒழிக்கலாம் என்று ஓட்டர்கள் நம்புவதற்கும், மதுபானம் ஒழியாவிட்டால் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதற்கும் அர்த்தம் உண்டு.

- தலையங்கம் : குடி அரசு 16 . 8 . 1925


மது பானத்தினால் ஏழைகளின் நிலை எவ்வாறு சீரழியும் என்பதைக் காரண காரியத்தோடு பெரியார் விளக்கியிருந்தும் அந்தப் பெரியாரின் வாரிசான வீரமணி கள்ளுக்கடை திறக்கச் சொல்வதிலிருந்து அவர்களுக்கு பகுத்து உணரும் அறிவும் இல்லை, பெரியாரைப் பயன்படுத்துவது மக்களை ஏய்க்கத்தான் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்...

Monday, May 4, 2009

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 20

பகுத்தறிவுப் பகலவன் என்று போலி பகுத்தறிவுவாதிகளால் போற்றப்படும் பெரியார் அவர்களின் அறிவுரைகளையும், போதனைகளையும் குருட்டு பக்தியை விலக்கி வைத்துவிட்டு கூர்மையாகப் பார்த்தால் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களே அதிக அளவில் உள்ளதைக் காணலாம்.

பெரியார் அவர்கள் மக்களிடம் பிச்சையெடுத்து கோடிக்கணக்கில் நிதி திரட்டினாலும், இல்லாத மக்களுக்கு உதவவேண்டும் என்ற சிந்தனையில்லாதவராக இருந்ததால் மற்றவர்கள் தர்மம் கொடுப்பதும் பெரியாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

மற்றவர்களுக்குச் சல்லிக் காசைக் கூட கொடுக்காமல் இருப்பது கஞ்சத்தனத்தின் காரணமாக அல்ல என்று நியாயப்படுத்தும் வகையில் பின்வருமாறு பெரியார் எழுதியுள்ளார்.

தர்மம் செய்வது அக்கிரமம்

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.

ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

(21.4.1945 அன்று 'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய
தலையங்கம்)

தர்மம் செய்யக் கூடாது என்பதற்கு பெரியார் எடுத்துக் காட்டும் எந்த காரணமும் ஏற்கத்தக்கதல்ல!

'செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.'

என்பது பெரியாரின் வாதம் பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பெயராலும் பணக்காரர்களாக ஆனவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். தங்களது திறைமையாலும், நேர்மையாலும், கடின உழைப்பாலும், வாரிசு முறையிலும் செல்வத்தைப் பெற்றவர்கள்தான் அதிகமாக உள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது ஊர்களில் பணம் படைத்தவர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.

சூழ்ச்சி செய்யத் தெரியாத எத்தனையோ வெகுளிகளிடம் செல்வம் சேர்வதை நாம் காண்கிறோம்.

நாம் எதைப் பற்றி எந்த முடிவுக்கு வருவதானாலும் ஒன்று அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் இருக்க வேண்டும். அல்லது நம் கண் முன்னே தெரியும் உண்மைகளை அடிப்படையாக வைத்து வைத்து அம்முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு மாற்றமாக எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது மடமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.

உழைக்காமல் சோம்பியிருப்பவனுக்கும், உழைத்துப் பாடுபடுபவனுக்கும் பொதுச் சொத்து என்ற போலிவாதம் செய்து சமமாகப் பங்கிடுவது எந்த வகையிலும் பகுத்தறிவுக்கு உகந்ததாகாது.

திறமையும், ஆற்றலும், கடின உழைப்பும், சூட்சியும், சூதுவாதும் நிறைந்த ஒருவன் ஒரு கடையை நடத்துகிறான். இவை ஏதும் இல்லாத ஒரு அப்பாவி ஒருவனும் அதேபோன்ற கடையை நடத்துகிறான்.

திறமைசாலியைவிட அப்பாவியின் கடையில் நல்ல முறையில் வியாபாரம் நடந்து அவனது செல்வம் பெருகுவதையும், தியமைசாலி நொடிந்து போவதையும் பரவலாக நாம் காணலாம். இந்த உண்மைகளை எல்லாம் பெரியார் கண்டு கொள்ளவில்லை.

பெரியார் தனது இயக்கத்துக்காக சொத்துக்களைத் திரட்டி கோடி கோடியாக சேர்த்து வைத்துச் சென்றாரே! அந்தச் சொத்தக்களுக்கு மட்டும் பெரியாரின் வாதம் பொருத்தமில்லாமல் போனது ஏன்?

எத்தனையோ பேர் இயக்கம் ஆரம்பித்து அவர்களால் சொத்துக்களைத் திரட்ட முடியவில்லை. ஆனால் பெரியார் மட்டு கொடி கோடியாக திரட்டினாரே இதற்கு காரணம் என்ன? சூழ்ச்சி, பலாத்காரம்தான் காரணமா?

பொதுச் சொத்துக்கள் என்ற வாதத்தின்படி தி. க. வின் சொத்துக்கள் அனைத்தையும் எல்லா மக்களுக்கும் பிரித்துக் கொடுக்காவிட்டாலும் பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமாவது பிரித்துக் கொடுக்க போலி பகுத்தறிவுவாதிகள் முன் வருவார்களா?

பெரியாரின் சீடர்களில் பலர் படித்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான அவரது சீடர்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் திண்டாடுகிறார்களே! தனது இயக்கத்தில் கை நிறைய சம்பாதிப்பவர்களின் வருமானம் அனைத்தையும் திரட்டி அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப் போலி பகுத்தறிவுவாளர்கள் தயாரா?

இன்றைக்கும் போலி பகுத்தறிவுவாளர்களில் பலர் பல கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளனர்.

இவர்கள் பெரியாரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று உண்மையாக நம்பினால் தங்களது சொத்துக்கள் அனைத்தும் பொதுச் சொத்து என அறிவிப்பார்களா? தங்கள் பெயரில் சொத்து வைத்துள்ள பெரியாரின் சீடர்கள் இதை முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டத் தயாரா? அவர்களில் ஒரே ஒருவர் கூட இவ்வாறு செய்யமாட்டார் எனும்போது பெரியார் கூறியது தவறு என்பது புலப்படவில்லையா?

பெரியார் கஷ்டப்பட்டு உருவாக்கிய பகுத்தறிவு மிக்க சீடர்களுக்கே பெரியாரின் கூற்று அறிவுக்குப் பொருந்தாது என்று தெரியும்போது பகுத்தறிவுப் பகலவன் என்று அழைப்பது எப்படி? இதை உண்மை எனும் பொய் ஏடு விளக்குமா?

அடுத்து ரஷ்யாவில் லெனின் என்பவர் ஒரு உத்தரவு மூலம் ஏழை பணக்காரன் என்பதை ஒழித்தார் என்று கூறி பெரியார் தனது கருத்துக்கு வலிமை சேர்க்க எண்ணுகிறார். பெரியாரன் இந்த கூற்றும் தவறானதாகும்.

ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை இரும்பத்திரை போட்டு மறைத்துவிட்டு அனைவரும் சமமாக உள்ளனர் என்று சீன் காட்டியதை உண்மை என்று நம்பி பெரியார் இவ்வாறு கூறுகிறார்.

பேச்சுரிமை, எழுத்துரிமை அனைத்தையும் பறித்துவிட்டு நாட்டில் உள்ள அவலங்களை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிட்டு சோவியத் ஆடிய நாடகத்தை நிஜம் என்று நம்பும் அளவுக்குத்தான் பெரியாரின் சிந்தனை இருந்தது. சோவியத் சின்னாபின்னமாகி இரும்புத்திரை கிழிக்கப்பட்டு அந்த நாட்டின் அவலங்கள் அம்பலத்துக்கு வந்ததை பெரியார் காணவில்லை. அவர் கண்டிருந்தால் தனது இந்த நற்சான்றுக்காக வேதனைப் பட்டிருப்பார்.

சோவியத்தில் நடந்தது என்ன?

பணக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அனைவரும் சமம் என்று உதட்டளவில் கூறினார்கள். உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் பணக்காரர்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டு மற்றவர்களைவிட கூடுதலாக அனுபவித்தார்கள்.

லெனினுக்குக் கிடைத்த வசதிகள் சராசரி குடிமகனுக்குக் கிடைக்கவில்லை. பொலிட் பீரோக்களுக்குக் கிடைத்த வீடு வாசல்கள் மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.இதனால்தான் சோவியத் சிதறியபோது லெனின் விலையை மக்களே சுக்கு நூறாக உடைத்தப் போட்டனர்.பெரியார் சொன்னது போல் நடந்திருந்தால் இப்படி நடந்திருக்கவே முடியாது.

முதலாளிகள் அனுபவித்து வந்தவற்றை லெனினும், அவரது கட்சியின் உயர்மட்டக் குழுவினரும், பொலிட் பீரோக்களும், அக்கட்சியின் நிர்வாகிகளும் அனுபவித்தார்கள் என்பதுதான் உண்மை.

லெனினுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இருந்தது போன்ற கார்களும், அரண்மனைகளும் அனைத்து குடிமக்களக்கம் இருந்ததா? நிச்சயமாக இல்லை.

இன்னொரு வகையான ஏற்றத் தாழ்வைத்தான் லெனின் உருவாக்கினார்.

ஒரு வாதத்திற்காக பெரியார் கூறுவது போல், லெனின் செய்து காட்டிய நடைமுறைதான் சரி என்று வைத்தக் கொள்வோம். அப்படியிருந்தாலும் ஒரு பகுத்தறிவாதி என்ன செய்ய வேண்டும்? அந்த நிலை ஏற்படும்வரை ஏழைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதானே சிந்திக்க வேண்டம்?

ஒரு கிராமத்தில் ஒருவனுக்கு கடுமையான நோய் ஏற்பட்டுவிட்து. அதற்குரிய முழுமையான சிகிச்சை சென்னையில்தான் கிடைக்கும். ஆனால் உள்ளூரில் மேலோட்டமான மருத்துவம் செய்யும் மருத்துவர் மட்டுமே இருக்கிறார். சென்னைக்குக் கொண்டு செல்வதற்கு அந்த நோயாளியின் குடும்பத்தில் வசதியில்லை. அல்லது சென்னை செல்லும் வரை உயிர் தங்காது என்ற நிலை உள்ளது.

இந்த நொயாளியின் உறவினர்கள் உள்ளூர் மருத்தவரிடம் அவருக்கத் தெரிந்த சிகிச்சையை செய்ய முயல்கிறார்கள். நோயை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வேதனையை அவரால் குறைக்க முடியும் என்பதால் அந்த மருத்துவரை நாடுகிறார்கள்.

இவரது நொய்க்கு சென்னையில்தான் வைத்தியம் உள்ளது. உள்ளூர் டாக்டரிடம் காட்டாதே என்று ஒருவன் அடம்பிடிக்கிறான் என்றால் இவனை என்னவென்போம்?

பெரியார் ஆசைப்பட்டது போன்ற லெனினிஸம் இங்கே இல்லை. அது வரும்வரை ஏழைகள் பட்டினியால் துடிக்கிறார்கள். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதன் மூலம்தான் இப்பொதைக்கு வறுமையைத் தடுக்க முடியும் என்று சிந்திப்பது பகுத்தறிவா? லெனினிசம் வரும்வரை ஏழைகளக்கு ஒருவனும் எதுவும் கொடுக்கக் கூடாது: செத்து தொலையட்டும் என்பது பகுத்தறிவா?

அறிவுக்கும், நடைமுறைக்கம் ஒவ்வாத நாச்சுக் கருத்தை விதைத்தவரை பகுத்தறிவுப் பகலவன் என்பது எப்படி என்று போலி பகுத்தறிவாளர்கள் விளக்குவார்களா? பெரியார் பக்தியை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு சிந்தித்துப் பாருங்கள்!

எனவே பெரியாரின் இந்த கூற்றில் பகுத்தறிவும் இல்லை: பொறுப்பணர்வும் இல்லை: சமூக அக்கறையும் இல்லை. அறிவக்குப் பொருந்தாத வரட்டு வாதமே இது என்பதில் ஐயமில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்...

Sunday, May 3, 2009

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 19

பகுத்தறிவுப் பகலவன் என்று போலி பகுத்தறிவாளர்களால் போற்றப்படும் பெரியாரின் கொள்கையிலும், சிந்தனையிலும் பகுத்தறிவை விட பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பகுத்தறிவு என்ற போர்வையில் வெளிவந்தன. அறிவை விட உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் மக்கள் இதனை சிந்திக்க மறுத்தாலும் உண்மை இதுதான்.

பெரியாரின் சிந்தனைக் குறைவை எடுத்துக் காட்டும் அவரது இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்!

ஆணும் பெண்ணும் இணைந்துதான் மனித சமூகம் உருவாகின்றது. இவ்வாறு இணைவதில் இருவருக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இன்பம் கிடைத்தாலும் இதன் விளைவாக பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உணர்வு, உரிமை போன்ற விஷயங்களிலும், இன்ன பிற விஷயங்களிலும் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் என்றாலும் உடல் கூறு விஷயத்தில் உள்ள வித்தியாசத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஒருவரை ஒருவர் ஈர்ப'பதனால்தான் இல்லற வாழ்க்கை நடக்கிறது. காலம் செல்லச் செல்ல உடல் உறுப்புகளில் ஏற்படும் தளர்ச்சியின் காரணமாக பெண்களிடம் மட்டும் இந்த ஈர்ப்புத் தன்மை குறைந்து போய் விடுகிறது. அதுவும் ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது மேலும் குறைந்துவிடும்.

பத்து வருடம் இணைந்து வாழ்ந்த தம்பதியர் பிரிந்து விட்டால் ஆணுக்கு உடனே அடுத்த துணை கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு அடுத்த துணை கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.

இதனால்தான் தள்ளாத வயதுக் கிழவரான பெரியாருக்கு இளம் பெண்ணான மணியம்மையை மணந்துகொள்ள முடிந்தது. இந்த வித்தியாசம் இல்லாவிட்டால் மணியம்மை பெரியாரை மணந்திருக்க மாட்டார்.

25 வயதுடையவன் ஈர்ப்பது போல் 40 வயதுடையவனும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக பெண்களை ஈர்க்க முடியும். 25 வயதுப் பெண் ஈர்ப்பது போல் 40 வயதுப் பெண்ணால் ஒரே மாதிரியாக ஆண்களை ஈர்க்க முடியாது. பெரியாருக்கு இது பிடிக்காவிட்டாலும், புரியாவிட்டாலும் இதுதான் உண்மை நிலை.

சினிமாவில் கூட 60 வயது கதாநாயகன் 20 வயது கதாநாயகியுடன் கூத்தடிப்பதை சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் கதாநாயகி 25 வயது வரை கூட கதாநாயகியாக நீடிக்க முடியாது. 40 வயது கதாநாயகியை 20 வயது இளைஞனுடன் கூத்தடிக்கவிட்டால் பெண்களே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈர்ப்பு சமாச்சாரம்தான் இதற்கு காரணம். இதுதான் யதார்த்தம். இதுதான் பகுத்தறிவு.

பெரியார் வயதுடைய பெண்ணை வீரமணி திருமணம் செய்ய மாட்டார். வீரமணி வயதுடைய பெண்ணை பெரியார் வயதுடைய ஆண் திரமணம் செய்வார் என்பதுதான் எதார்த்தமான நிலை. இதை விவரித்துச் சொன்னால் தொடர் ஆபாசமாகிவிடும்.

பெண்களின் உடர்கூற்றைக் கவனித்து அவர்களின் பாதுகாப்பைக் கருதி அவர்கள் விஷயமாக முடிவு எடுப்பதாக இருந்தால் எத்தகைய முடிவை எடுக்க வேண்டும்?

பெண்களின் ஈர்ப்புத் தன்மை குறைந்து அவர்களுக்கு ஆண் துணை கிடைக்காத நிலை ஏற்படாமல் சமூகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இணையும் அவர்கள் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விலகி விடாமல் குறிப்பாக ஆண்கள் சகித்தக் கொண்டு போகவேண்டும். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விலகி விட்டால் சமுதாயம் நம்மைப் புறக்கணிக்கும். யாரும் பெண் தர மாட்டார்கள் என்ற அச்சம் ஆண்களுக்கு இருக்கவேண்டும். இது இருக்கும் வரை தான் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லற சகமும் கிடைக்கும்.

பெண்கள் மீது அக்கறை உள்ள யாரும், பகுத்தறிவு சிறிதளவாவது உள்ள யாரும் இப்படித்தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் பெரியார் என்ன சொல்கிறார் தெரியுமா? திருமணம் செய்வதற்கு முன் பத்து மாதங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழணுமாம்! அதன் மூலம் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளணுமாம்! பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமாம். இப்படி உளறுகிறார் பெரியார்.

நான் 1932 இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை , ' Proposed Husband and Wife ' என்கிறார்கள். ' அப்படி என்றால் என்ன அர்த்தம் ?' என்று கேட்டேன். ' நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம் ' என்றார்கள். ' எவ்வளவு காலமாக ? ' என்று கேட்டேன். ' எட்டு மாதமாக ' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் ? அந்த நாடு முன்னேறுமா ? ' பதிவிரதம் ' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா ? (பெரியார் ஈ.வே.ரா அவர்கள் விடுதலை நாளேட்டில் 28.6.1973 அன்று எழுதிய கட்டுரை)

பத்து மாதங்கள் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவிட்டு பிடிக்கவில்லை என்று விலகிக் கொண்டால் அந்த ஆணுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெண்ணுக்கு பாதிப்பு இல்லையா?

இந்த பத்து மாத காலத்தில் அவள் குழந்தை பெற்று இருந்தால் அதன் நிலை என்ன? என்றெல்லாம் பெரியாரின் மூளைக்கு எட்டவில்லை. எவனாவது எதையாவது புதிதாகச் சொன்னால் அதைத் தூக்கிப் பிடிப்பது என்ற அளவுக்கத்தான் பெரியாரின் மூளை வேலை செய்துள்ளது. அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஆய்வு வெய்யும் அளவுக்குப் பரந்ததாக அவரது அறிவு இருக்கவில்லை.

பெரியாரை விட்டு விடுபோம். பெரியாரை பகுத்தறிவுத் தந்தை எனக் கொண்டாடுவோர், உண்மையிலேயே அவ்வாறு நம்பினால் இதன்படி வாழ்வதற்கு முன் வருவார்களா?

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு மகளோ சகோதரியோ இருந்தால் 'நீ பத்து மாதம் எவனுடனாவது உடல் சுகம் அனுபவித்துப் பார்த்துவிட்டு அதன் பின்னர் உனக்குப் பிடித்திருந்தால் மணந்து கொள்' என்று கூறத் தயாரா?

நம்மை வம்புக்கு இழுத்த உண்மை ஏட்டின் எழுத்தாளர் தனது மகளுக்கு இந்த நிலையைப் பரிந்துரை செய்யத் தயார் இல்லை என்றால் பெரியாரின் மேற்சொன்ன தத்துவம் உளறல் என்று தன்னையறியாமலேயெ அவர் ஒப்புக் கொள்கிறார்.

பெண்களின் நலன் பற்றியும், உடல் கூறு பற்றியும் அறிவு இல்லாதவர்கள் மட்டுமே இது போன்ற கருத்தைக் கூற முடியும்.