Friday, September 25, 2009

கர்கரேயின் கனவு நிறைவேறுமா?

அவிழ்க்க முடியாத அல்லது அவிழ்க்கப்படக் கூடாது என்று சில இந்துத்துவ வெறியர்களால் மறைத்து வைக்கப்பட்ட முடிச்சுகளை அவிழ்த்து, காலங்காலமாய் முஸ்லிம்களின் மீது பழி போட்டு வந்த அவதூறு பிரச்சாரங்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஹேமந்த் கர்கரே எனும் மாவீரன்.

இந்திய பாதுகாப்பு பற்றி அதிகமாக சிந்தித்த அவர் விஸிட்டிங் மற்றும் பிஸினஸ் விசாக்களில் இந்தியாவிற்கு வந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கூட விட்டு வைக்காமல் கண்காணித்து தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார். அத்துடன் அபினவ் பாரத் போன்ற சிறு சிறு மத அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன எனவும் கண்காணிக்க ஆரம்பித்தார். அவ்வாறு கண்காணித்த போது தான் மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய உண்மைகள் வெளிவரத் துவங்கின. மாலேகானில் அப்பாவி மக்களை கொன்று அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி பெரும் கலவரங்களை நடத்த பிரக்யா சிங் என்ற சன்னியாசி பெண் உட்பட பலர் திட்டமிட்டது தெரிய வந்தது. இதை கர்கரே உறுதி செய்து வெளியிட்டதும் மூன்று நாட்களில் தான் குண்டு வைத்து கொல்லப்பட இருப்பதாக டெலிபோண் மிரட்டல்கள் வந்தன. பூனாவிலுள்ள பொது தொலைபேசி மையத்திலிருந்து தான் அந்த போண் வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவர்களுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் உள்ள தொடர்பை அவர் வெளிப்படுத்தினார். வெடிகுண்டு வைக்க மூளையாக செயல்பட்ட லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்தும் அதை ஒத்துக் கொண்டான். அதன்பிறகு கர்கரே அதிகமான மிரட்டலுக்கு ஆளானார். அனைவரும் பயந்தபடியே மும்பை தாக்குதலில் கர்கரே எனும் மாவீரன் குறிவைத்து கொல்லப்பட்டார்.


அவர் இறந்த பிறகு அதை வைத்து அரசியல் லாபம் ஈட்ட அரசியல்கட்சிகள் போட்டி போட்டு கர்கரேயின் மனைவி கவிதாவை வேட்பாளராக்க காங்கிரஸூம் பி.ஜே.பியும் திட்டமிட்டன. ஆனால் அவரோ வளைந்து கொடுக்கவில்லை. நரேந்திர மோடி கொடுத்த ஒரு கோடி ரூபாயை மோடியின் முகத்தில் வீசி எறிந்தார் கவிதா. இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி அப்பாவிகளை கொன்று அமைதியை குலைக்கும் தீவிரவாதிகள் அடக்கப்பட வேண்டும். என் கணவர் அடையாளம் காட்டிய குற்றவாளிகள் தண்டனை பெறவேண்டும். அதுதான் எனக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தேவை என்றார். ஆனால் அடையாளம் காட்டப்பட்ட தீவிரவாதிகள் தண்டிக்கப்படாமல் தப்பிவிடுவார்களோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு மட்டுமின்றி அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜாட்டா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நடத்தியது முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி என்று மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மூன்று குண்டு வெடிப்புகளையும் ஒரே குழுதான் நடத்தியதென்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஏ.டி.எஸ் தெரிவித்தது. மத்திய பிரதேசில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகனாக இருந்த சுனில் ஜோசி இருவர் கொல்லப்பட காரணமாக இருந்த அஜ்மீர் தர்காவில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு பின்; மத்திய பிரதேஷ் தேவாசில் வைத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

2006 ல் பெருநாளன்று ஒளரங்காபாத் மஸ்ஜிதில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அவை வெடித்ததால் பஜ்ரங்தள்ளை சார்ந்த இரண்டு பேர் இறந்தனர். 2006 ஏப்ரல் 6ம் தேதி பஜ்ரங்தள் அமைப்பை சார்ந்த லஷ்மண் ராஜ் என்பவனின் வீட்டில் தான் இது நிகழ்ந்தது.

மராத்துவாடாவிலுள்ள ஜல்னா,பர்பணி போன்ற இடங்களில் 2003 மற்றும் 2004 ல் நடந்த குண்டுவெடிப்புகளையும் மாலேகான் தீவிரவாதிகள் தான் நடத்தியுள்ளனர் என்றும் ஏ.டி.எஸ் கண்டறிந்தது.

இவ்வாறு இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகள் தான் செய்தன என்ற அடுக்கடுக்கான ஆதாரங்களை ஏ.டி.எஸ் சமர்ப்பித்திருந்தது. ஆனால் ஹேமந்த் கர்கரேயின் மறைவுக்கு பின் அந்த வழக்கின் தீவிரம் குறைய தொடங்கியது. ஜாமீன் பெற முடியாத பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் கர்னல் புரோகித் உட்பட குற்றவாளிகள் பலரை விடுவிக்கும் நோக்கில் அந்த வழக்கு சாதாரண வழக்காக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சன்னியாசி பிரக்யா சிங் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கோவை குண்டுவெடிப்பின் காரணமாக எவ்வித ஆதாரமுமின்றி நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் விசாரணை கூட இன்றி பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தனர். ஆனால் உறுதியான ஆதாரங்கள் இருந்த போதும் பயங்கரவாதிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது தொடருமானால் இந்தியாவில் பயங்கரவாதம் பெருகி நாடு சிதறுண்டு போகும். எனவே கர்கரேயின் கனவு நிறைவேறினால் தான் அவர் போன்ற வீரர்கள் பெருகி இந்தியாவை தலைநிமிர செய்வர். இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தாமல் தலைநிமிரச் செய்வது ஆட்சியாளர்களின் கையில் தான் இருக்கின்றது.

கடமை தவறாத கர்கரே!

ஜெனீவாவில் 'ரா' அதிகாரியாக ஏழு வருடம் பணியாற்றிவிட்டு சொந்த பூமியான மஹாராஷ்டிராவுக்கு வந்த கர்கரே, கடந்த வருடம் ஜனவரியில் தான் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1982 ல் ஐ.பி.எஸ் பெற்ற நாக்பூர்வாசியான இவர், குற்ற தடுப்பு பிரிவிலும் போதை பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றியவர். டாக்டர்.கே.பி. ரகுவம்சி ஏ.டி.ஜி.பி ஆக பதவி உயர்வு பெற்று ரெயில்வே பாதுகாப்பு படைக்கு சென்றதால் கர்கரே ஏ.டி.எஸ்ஸின் (தீவிரவாத தடுப்பு பிரிவு) தலைவராக பொறுப்பேற்றார். அன்று முதல் அவர் கண்காணிக்கபட்ட ஒருவராக மாறினார். தனக்கு கீழுள்ள அதிகாரிகளுடன் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை பற்றிய தகவல் தான் அவருக்கு தரப்பட்டது. அப்போது 2006ல் நடந்த நாந்தேடு குண்டு வெடிப்பை சுட்டிக்காட்டி, பிற மதத்தவர்களும் வெடிகுண்டு தயாரிக்கிறார்களே என்று கூறினார் கர்கரே. அதுபற்றிய தகவல்களை அதிகாரிகள் தராததால் அவர்களை கண்டித்ததாகவும் செய்திகள் வெளியானது.

நன்றி : உணர்வு

சுதந்திரதின தீவிரவாதிகள்!?

சுதந்திர தினத்தை காரணம் காட்டி 10 வருடங்களாக டெல்லி போலீஸாரால் தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட குற்றவாளி என்று நிரூபிக்கபடவில்லை எனும் அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.

'த டெலகிராஃப்' பத்திரிகையின் டெல்லி நிருபரான அனந்த்யா சென்குப்தா என்பவர் டெல்லி போலீஸின் தீவிரவாத வேட்டையை அம்பலப்படுத்தியுள்ளார். சுதந்திரதினத்தன்று தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் என்று கூறி 2000ம் ஆண்டு ஜனவரி 24 முதல் டெல்லி போலீஸ் கைது செய்த தீவிரவாதிகள் பற்றி விசாரித்த போது இத்தகவல் வெளியானது.



2003 ஆகஸ்ட் 10ம் தேதியன்று ஆயுதமேந்திய லக்சரே தய்யிபா தீவிரவாதிகள் என்று கூறி கைது செய்து இன்று வரை தீஹார் ஜெயிலில் இருக்கும் அல்தாப் ஹூசைன், அல்தாப் அஹமது, 2004 ஆகஸ்ட் 16ல் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட சைனீஸ் பிஸ்டலுடன் வந்ததாக போலீஸார் கூறிய லக்சர் தீவிரவாதி, 2005 ஜூலையில் நடுங்க வைக்கும் சதித்திட்டங்களுடன் வந்ததாக மொபைல் போணுடன் கைது செய்யப்பட்ட தீஹார் ஜெயிலில் இருக்கும் மூன்று பேர், 2006 ஆகஸ்ட் 10 ல் வெடிபொருட்களுடன் வந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இரண்டு லக்சர் தீவிரவாதிகள், 2007 ஜூலை 28 ல் லக்சரின் திட்டங்களுடன் வந்ததாக கூறி கைது செய்து தீஹார் ஜெயிலில் அடைக்கப்பட்ட சபீர் அஹமது லோன், 2008 ஜூலை 29 ல் டெல்லியை தாக்க வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டை சார்ந்த முஹம்மது ஹக்கீம் ஆகியோர் சுதந்திர தின தாக்குதல் திட்டத்துடன் வந்ததாக கூறி போலீஸால் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்கள். ஆனால் இன்று வரை எந்த குற்றமும் நிரூபிக்கப்படாதவர்கள் என்று அனந்த்யா கண்டறிந்துள்ளார். வருடந்தோறும் நீளுகின்ற பட்டியலில் இடம் பிடிக்க டெல்லி போலீஸூக்கு இந்த வருடமும் இருவர் கிடைத்துள்ளனர்.

ஜாவேத் அஹமது மற்றும் ஆஷிக் அலி ஆகியோர் காரில் இரண்டு லாண்ட் கிரானைடு, ஏ.கே 47 துப்பாக்கிகள் 120 புல்லட்டுகள் சகிதம் ஒரு பார்க்கிங் ஏரியாவில் பிடிக்கப்பட்டதாக கதை புனையப்பட்டது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் சீஃப் ஸய்யித் ஸலாஹூதீனின் கட்டளைப்படி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் டெல்லி போலீஸார் கூறியிருந்தனர். தீவிரவாதிகளென்று முத்திரை குத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்N;டாரின் வழக்குகளை நடத்தும் சன்வர்கான் எனும் வக்கீலின் வார்த்தைகளை அனந்த்யா சுட்டிக்காட்டுகிறார்.

டெல்லிக்கு வரும் காஷ்மீரிகளை டெல்லி போலீஸ் பின் தொடர்ந்து சென்று அவர்களை ரயில்வே ஸ்டேசனிலோ பஸ் ஸ்டாண்டிலோ வைத்து பிடித்து செல்கின்றது. அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அழைத்து செல்வதை உறவினர்களுக்கு கூட தெரிவிக்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்கிறது. பின்னர் குடியரசு தினம் அல்லது சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறி ஆஜர்படுத்துகின்றது.

காணாமல் போனதாக உறவினர்கள் போலீஸில் புகார் செய்துள்ள காஷ்மீர் இளைஞர்களை போலீஸ் இவ்வாறு பிடித்து சிறையிலடைத்த சம்பவம் தனக்கு தெரியுமென்று கான் கூறுகின்றார். புகார் தெரிவித்துள்ள இளைஞர்கள் தங்கள் கஸ்டடியில் தான் இருக்கின்றனர் என்ற எந்த விபரத்தையும் போலீஸ் உறவினர்களுக்கு தெரிவிப்பதில்லை.

பனிஹனில் பிரதேசத்தை சார்ந்த காஷ்மீரி முஹம்மது அமீன் வானியை 2006 டிசம்பரில் காஷ்மீரின் கத்வாயில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். டெல்லி லோடி காலணியில் ஒரு வீட்டில் மறைத்து வைத்திருந்த வானியுடன் பின்னர் ஒரு பங்களாதேசியையும் அடைத்தனர். தேவ்பந்தில் தாருல் உலூமில் படிப்பதற்காக வந்த லுத்புர் ரஹ்மான் என்ற பங்களாதேஷ் மாணவர் தான் அவர். எட்டு மாதங்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்திலிருந்து கஸ்டடியிலெடுத்து ரகசிய பிரிவில் அவனை ஒப்படைத்தனர். பின்னர் பாகிஸ்தான் தொடர்புள்ள தீவிரவாதி என்று முத்திரை குத்தி வெடிகுண்டு வழக்கில் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர். அவ்விருவரும் தற்போது தீஹார் ஜெயிலில் மூன்றாம் நம்பர் செல்லில் கிடப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அரசு தரும் பணமுடிப்புகளும் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வும் பரிந்துரையும் போலீஸ் இத்தகைய வேட்டைகளில் இறங்க தூண்டுகோலாக அமைகின்றன என கான் குறிப்பிடுகிறார். அரசு வழங்கும் சில சலுகைகளுக்காக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதும் என் கவுண்டர் எனும் பெயரில் சுட்டுத்தள்ளுவதும் தொடர் கதையாகி வருகின்றது. சுதந்திர தினம் என்றாலே கோவிலுக்கு பாதுகாப்பு வழங்கி முஸ்லிம்களை திவிரவாதிகளாக சித்தரிக்கும் செயலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. பாட்லா சம்பவத்தில் ஊர் மக்களும் மனித உரிமை அமைப்புகளும் களமிறங்கி போலீஸ் நடத்திய என்கவுண்டர் பொய்யானது என பல்முனை போராட்டங்களை நடத்திய பிறகும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது தன்னை கேள்வி கேட்க யாருமில்லை என்ற இறுமாப்பை காட்டுகின்றது. இனிவரும் காலங்களில் இது தடுக்கப்படவில்லையென்றால் ஒவ்வொரு வீட்டிலும் போலீஸ்காரர்களால் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகிறான் எனும் சொல் இந்திய சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடும்.

நன்றி : உணர்வு

Monday, September 7, 2009

போதையில் தள்ளாடும் தமிழகம்!

சட்டத்துறை ஆணைய தலைவர் ஏ.ஆர்.லட்சுமணன், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் வாகன விபத்து தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் தற்போதைய இந்திய தண்டனை சட்டம் 304(ஏ)ல் திருத்தம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென்று சட்டத்துறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மது அருந்தும் வாகன ஓட்டிகளால் மட்டும் பிறருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மது என்பது வீட்டை, நாட்டை அழிக்கும் அரக்கன் என்பதும் ஆனால் அதற்கு எதிர்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்கு சென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம் கண்டு வருகின்றோம். சில மாதங்களுக்கு முன் சரக்கு ரயில் வண்டியின் மேற்கூரையில் மின்சார ஒயரை பிடித்ததால் உடல் கருகிய ஒருவரிடம் போலீஸ் விசாரித்த போது மது அருந்திய போதையில் லாரி என நினைத்து ரயில்வண்டியின் மேற்கூரையில் ஏறியதாக அவர் குறிப்பிட்டார். போதை தலைக்கேறி பெத்த மகளை படுக்கைக்கு அழைத்த கொடுஞ்சம்பவங்களும் நடந்துள்ளன.

ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மது அருந்திவிட்டு வாகனம் மட்டும் ஓட்டக்கூடாது என்பது மட்டும் என்ன நியாயம்?

மக்களை காக்க வேண்டிய அரசின் திட்டங்களில் பெரும்பாலானவை கேலிக்குரியதாகவே இருக்கின்றன.

எயிட்ஸை தடுத்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே ஊர் முழுவதும் ஆணுறை இயந்திரங்களை நிறுவி விநியோகித்தும் வருகின்றது.

'குடி, குடியை கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் அது தடுக்கப்பட்டு விடுமா? எப்படியாவது கஜானாவை நிரப்ப வேண்டுமென்று அரசு மக்களை மடையர்களாக்குகின்றது.

இப்படியே போனால் திருடுவது தவறு என்ற வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை அரசு விநியோகித்து விட்டு திருடுவதற்காக அரசே பயிற்சி பள்ளிகளை துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவற்றிற்கெல்லாம் காரணம் கஜானா நிரம்ப வேண்டும் என்பது தான். டாஸ்மாக் கடைகளில் 2007 - 08 ம் ஆண்டு மூன்று கோடியே ஆறு லட்சத்து 24 ஆயிரம் பெட்டிகள் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது. இது 2008-09 ஆண்டில் மூன்று கோடியே 55 லட்சத்து 28 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. இதே போல் 2007-08 ஆண்டு ஒரு கோடியே 96 லட்சத்து 36 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையானது. இது 2008-09 ம் ஆண்டில் இரண்டு கோடியே 23 லட்சத்து 72 ஆயிரம் பெட்டிகளாக அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு கிடைத்த வருவாய் 10 ஆயிரத்து 601 கோடியே 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2007-08 ம் ஆண்டில் 8 ஆயிரத்து 821 கோடியே 16 லட்சம் ரூபாயாக இருந்தது.

வருமானத்திற்காக மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் அரசு, பாதிப்புகளை உணர மறுக்கிறது அல்லது மறைக்கிறது. காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமுலில் உள்ளது என மக்கள் நம்பி இருக்க, கள்ளச்சாராயத்தை குடித்து நூற்றுக்கணக்கானோர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்குவதாக இருந்தது.

அவ்வபோது கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை காவல்துறை கைது செய்ததாக நம்மால் பத்திரிகைகளில் பார்க்க முடியும். மக்கள் மீது அக்கறை கொண்டா அரசு இதை செய்கின்றது? இல்லை. தனியார் சாராயம் காய்ச்சும்போது அரசுக்கு வருமானம் கிடைக்காது என்பதால் அது கள்ள சாராயமாம். அரசே காய்ச்சி விற்பனை செய்வதால் அது நல்ல சாராயமாம்.

தமிழகத்தில் ஆறு சாராய தொழிற்சாலைகள் உள்ளன. மூன்று பீர் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது கூடுதலாக மூன்று பீர் தொழிற்சாலை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் ஆறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி தர கேபினட் காத்திருக்கிறது. இந்நிலையில் கள் இறக்க அனுமதி வேண்டுமென்று போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இதுநாள்வரை பூரண மதுவிலக்கு வேண்டுமென்று கூறிவந்த பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது தனது சுயநலத்துக்காக கள் இறக்க அனுமதி வேண்டும், கள் இறக்க நான் ஆதரவு தருகிறேன் என்று அறிவித்து விட்டார். பனை, தென்னை விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக கள் இறக்குவதை அனுமதிக்க வேண்டும் என்றும் கள்ளை உணவு பொருளாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவும் தனது செயற்குழுவில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஓட்டு வங்கிக்காக அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

டாஸ்மாக் சாராயத்தில் 42.8 சதவீதம் ஆல்கஹால் இருப்பதால் அதிக போதை தரும். ஆனால் கள்ளில் 4.5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் உள்ளது. இதனால் பாதிப்புகள் இல்லை என்பது சிலரின் கருத்து. சாராயம் குடித்ததால் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் கள் குடித்து இறந்தனர் என்று செய்திகள் வரவில்லை என்பதும் சிலரின் வாதம். ஆனால் கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள் குடித்ததன் மூலமாக 200 க்கும் மேற்பட்டோர் மயங்கி சரிய, பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதையும் பொய்யாக்கிவிட்டது.

மக்கள் மீது அக்கறை காட்டுவது போல், விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் அறிக்கை விடுகின்றன. விவசாயிகளின் வறுமையைப் போக்க மாற்றுவழிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வறுமையால் தான் திருடுகின்றனர் என்பதற்காக பிக்பாக்கெட்டை எவ்வாறு அனுமதிக்க முடியாதோ, பசியால் தான் பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதற்காக எவ்வாறு விபச்சாரத்தை அனுமதிக்க முடியாதோ அதுபோலத்தான் பிறருக்கு கெடுதியை தரும் போதை வஸ்துக்களுக்கும் அனுமதி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. டாஸ்மாக் மூலமாக தமிழகமே போதையில் தள்ளாடுகிறபோது கள் இறக்குவதற்கு அனுமதி தருவதால் மட்டும் என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்பது தான் பெரும்பாலானோரின் (அரசியல்வாதிகளின்) பேச்சாக இருக்கின்றது. தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்க நினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. பக்தியோடு செல்லும் கோவிலுக்கு கூட போதை பொருட்கள் காணிக்கையாக வழங்கப் படுகின்றன. பத்து லிட்டர் கள்ளும் ஒரு லிட்டர் ஸ்காட்ச் விஸ்கியும் ஒரு கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளாராம். டீ குடித்தால் தான் வேலை ஓடும் என்றிருந்த காலம் போய் ஒரு பெக் போட்டால் தான் ஐடியா வரும் எனும் நிலைக்கு இன்று சமூகம் தள்ளப்பட்டுவிட்டது. வரிசையில் நின்று பாட்டில் வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாற ஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதிய மதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின் நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும் அதை தடை செய்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது வேதனைக்குரிய செயலாகும். புகையை தாராளமாக்கி விட்டு பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பதாலோ மதுவை தாராளமாக்கிவிட்டு மது அருந்தி வண்டி ஓட்டாதீர் என்பதாலோ போலீஸ்காரர்களின் பாக்கெட் நிறையுமேயன்றி மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை.

நாட்டு மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். அப்போது தான் ஏழைகளின் வறுமை ஒழியும், குழந்தைகளின் கல்வி வளரும், நாடும் ஒளிரும்.

நன்றி : உணர்வு