Thursday, October 29, 2009

சனதன் சாஸ்தா அமைப்பு தடை செய்யப்படுமா?

மாலேகான் மற்றும் இந்தியாவின் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்பான 'சனதன் சனஸ்தா' என்ற அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தேசிய பாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கார்கரே தெரிவித்திருந்தார். ஆனால் மெஜாரிட்டி மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ அதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என பயந்த அரசு அதை தடை செய்யாமல் மௌனம் காத்தது. அதன் பயனாக நாம் ஓர் உண்மை அதிகாரியான கார்கரேயை இழந்துவிட்டோம். அவரது இழப்பிற்கு பின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி இருப்பதை கடந்த வாரம் கோவாவில் நடந்த குண்டுவெடிப்பு காண்பிக்கின்றது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்காக 'சனதன் சனஸ்தா' எனும் இந்துத்துவ அமைப்பு திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் படி அவ்வமைப்பை சேர்ந்த மெஸ் குண்டாபட்டீஸ், யோகேஷ்நாயக் என்பவர்கள் மக்கள் அதிகமாக கூடும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் திட்டத்துடன் கோவா மாநிலத்தில் மர்ம கோவா எனும் நகருக்கு வந்து நரகாசுரனின் கொடும்பாவி எரிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை இவர்கள் பொருத்திக் கொண்டிருக்கும் பொழுது பயங்கர சத்தத்துடன் அந்த வெடிகுண்டுகள் வெடித்தன. வெடிகுண்டுகளை வைத்த சனதன் சனஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சார்ந்த அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதை கடந்த வார உணர்விலும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

மாலேகான் குண்டு வெடிப்பு உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற பிரக்யா சிங் எனும் தீவிரவாதிப்பெண் சாமியார் நிர்வாகியாக இருக்கும் அமைப்பு தான் இந்த சனதன் சனஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பு. இவளது ஆதரவாளர்கள் தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து நகரில் வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்ட போது நகரின் மூன்று பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த பயங்கர வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் ஏராளமானோர் பலியாகி இருப்பர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் சனதன் சனஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை போலீஸார் கண்டறிந்தவுடன் உடனடியாக மர்ம கோவா நகரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பான்டா எனும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த இயக்கத்தின் ஆசிரமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 30 அறைகளை சோதனை செய்த போது குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அங்கிருப்பது தெரியவந்தது. வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் கருவிகள், மின்சார சாதனங்கள், டைமர் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியதுடன் ஆசிரமத்தில் இருந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய சுரேஷ் சந்தீப் ஷிண்டே வீரேந்திரா ஆகியோர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் சுரேஷ் என்பவர் குண்டு வெடிப்பில் பலியான யோகேஷ் நாயக்கின் சகோதரன் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ஆசிரமத்தில் 167 வெளிநாட்டினர் தங்கி இருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னும் அரசு இன்னும் ஏன் மௌனம் காக்கின்றது. அது தடை செய்யப்பட வேண்டும். அந்த அமைப்புகள் எங்கெல்லாம் பரவியிருக்கின்றதோ அவற்றையெல்லாம் கண்டெறிந்து துடைத்தெறிய வேண்டும். அத்துடன் ஜாமீனுக்கு அப்பீல் செய்துள்ள தீவிரவாத சன்னியாசிப் பெண் பிரக்யாசிங்கையும் அவளது கூட்டாளிகளையும் ஜாமீனில் வெளிவராத வகையில் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் சனதன் சாஸ்தா அமைப்பை தடை செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக மஹாராஷ்டிரா டி.ஜி.பி விர்க் தெரிவித்துள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும் கூட அதை ஆறப்போடாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதனால் பயங்கரவாதிகள் தங்கள் திட்டங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதையும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மறைத்து வைப்பதையும் தடுக்க முடியும். இல்லையெனில் தலையை விட்டு வாலை பிடித்த கதையாகி போகும். அதை அரசு உணர்வது நல்லது.

அமெரிக்காவின் மறைமுக தாக்குதல், மாவோஸ்டுகளின் வெறிச்செயல், இந்தத்துவ தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகள் போன்றவற்றை அரசு பொடுபோக்காக கருதாமல் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதன்றி பயங்கரவாதத்தை வேரறுக்க கைகோர்ப்போம் என்ற வெற்று முழக்கத்தால் பயனேதுமில்லை.

நன்றி : உணர்வு

No comments: