Monday, November 9, 2009

நடிகைகளுக்கு சேலை கட்டுவோம்!

மகளிர் அமைப்பு எச்சரிக்கை

கடந்த வாரம் சர்வதேச மனித உரிமை அமைப்பின் மகளிர் அணியினர் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சினிமாவில் ஆபாச உடைகளை அணிவதை எதிர்த்தும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை கண்டித்தும் குரலகள் எழுப்பப்பட்டன.

ஆபாச போஸ்டர்களுக்கு தார் பூசும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

ஒரு பக்கம் குடும்பத்தின் குத்துவிளக்காக சொல்லப்படும் பெண்களெல்லாம் சீரியலில் மூழ்கி அழுது வடிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்தியாவின் தூண்களான இளைஞர்களோ, நடிகைகளுக்கு கோவில் கட்டுவதையும் அவர்களின் பிறந்தநாளுக்கு ஆரத்தி எடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

கால்கடுக்க காத்து நின்று அதுவும் ஒரு மாதிரியான படமென்றால் யாரும் பார்த்து விடக் கூடாதே என மறைந்து மறைந்து படம் பார்த்த காலம் போய் இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை நீ பார்த்தே ஆக வேண்டும் என மிரட்டுவது போல் வரவேற்பறையில் வந்து விழுகின்றன நடிகைகளின் ஆபாச காட்சிகள். காந்தி ஜெயந்தி முதல் குடியரசு தினம் வரை நடிகைகளின் சிறப்பு பேட்டிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துவக்க காலங்களில் சினிமா நடிகைகளை விபச்சாரிகளை போல கருதியதால் பெண்கள் நடிக்க செல்வதை அவமானமாகக் கருதினர். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பெயிண்ட் அடித்து தாவணி சுற்றி இளமை தோற்றத்தில் நடிக்க வைத்தனர்.

மனித உரிமை கழகத்தின் மகளிர் பிரிவு சென்னையில் நடத்திய ஆபாசத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

ஆனால் இன்று சினிமா என்பது குறைந்த நேரத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் லாபகரமான தொழில் என்பதாலும் நடிகைகளுக்கு பண முதலீடு எதுவும் தேவையில்லை என்பதாலும் இளம் நடிகைகளும் நடிக்க புறப்பட்டு விட்டனர். அதன் காரணமாக போட்டி ஏற்பட்டு, ஆடைகளை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறார்களோ அந்த அளவுக்கு கிராக்கியும் ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டிய தணிக்கை துறையும் அதை கண்டு கொள்ளாததால் சபலிஸ்டுகளுக்கு கொண்டாட்டமாகி போய்விட்டது. தொலைக்காட்சியில் அரைகுறை ஆடையுடன் வரும் இந்த நடிகையை தந்தை, தாய், மகன், மகள் என அனைவரும் ஒன்றாக இருந்து ரசிப்பது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். தன் மனைவியும் மகளும் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என எண்ணும் ஒருவன் கூட தான் ரசிக்க, ஒழுக்கக் கேடான பெண்கள் வேண்டுமென்றே விரும்புகிறான். இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் மகளிர் அணியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் அவசியமான ஒன்றாகும்.

முஸ்லிம்கள் அணியும் ஃபர்தாவை ஆணாதிக்கம் என்றும் ஆடைக்குறைப்பை பெண் சுதந்திரம் என்றும் கூறும் போலி பெண்ணுரிமை வாதிகளுக்கு மத்தியில் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்பதே காண்போரின் கூற்றாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மனித உரிமை ஆணையத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா அவர்கள், 'சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும்' என்று கடுமையாக சாடினார். நடிகைகளின் ஆபாசம், தனியார் டிவி சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது? என்றும் கல்பனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வரவேற்க தகுந்த விஷயம். ஏனெனில் தன்னுடைய தேவைக்காக திருடக்கூடிய ஒருவன் எத்தகைய தீங்கையும் செய்ய முற்படுவான். அப்படிப்பட்டவனைக் கூட அவன் அகப்பட்டால் தான் அவனை தண்டிக்க முடியும். ஆனால் தணிக்கை துறையின் செயல் அப்படிப்பட்டதல்ல. ஒரு தீமை மக்களுக்கு செல்வதற்கு முன்பாகவே தடுத்திட முடியும். எனவே இது தணிக்கை துறையின் குற்;றமே! பணத்திற்காக எத்தகைய கீழ்த்தரமான கேரக்டர்களிலும் நடிக்க நடிகைகள் தயங்குவதில்லை. ஆனால் அது மக்களை சென்றடைந்து விடாமல் பாதுகாப்பது அதாவது தடுத்து நிறுத்துவது தணிக்கை துறையின் கடமையாகும்.

'கீழ்த்தரமாக, ஆபாசமாக ஆடை அணிந்தும் விரசக்காட்சிகளிலும் நடிக்கும் நடிகைகளுக்கு வெட்கம், மானம் இருந்தால் (அதுவெல்லாம் அவர்களுக்கு உண்டு என கல்பனா நினைக்கிறார் போலும்!) இனி அவ்வாறு நடிக்கக் கூடாது. ஆபாசமாகவே உடையணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம்' என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடக்குமானால் அது தணிக்கை துறைக்குத் தான் அவமானம். அனைத்து மகளிர் அமைப்பினரும் ஒன்றிணைந்து நடிகைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தணிக்கை துறையையும் முற்றுகையிட வேண்டும். மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய எதையும் யாரும் செய்துவிட முடியும் எனில் தணிக்கை துறை என்பது எதற்காக? அனைத்து துறைகளிலும் ஆய்வு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் தணிக்கை துறையை ஆய்வு செய்யவில்லை என்ற கேள்விகள் எழுந்து காலங்கள் பலவாயிற்று. அவ்வாறு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கறுப்பாடுகள் களையப்படும் போதுதான் ஆபாசங்கள் கட்டுக்குள் வரும். சமுதாயமும் சீர் பெறும்.

நன்றி : உணர்வு

No comments: