Wednesday, November 25, 2009

மூட நம்பிக்கையின் சிகரங்கள்!

விலங்கினங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது ஐந்தறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் பகுத்தறிவு என்று கூறப்படுகிறது. ஒரு பொருளை பார்த்தால் விலங்கினங்களால் அது என்ன என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் மனிதனோ அதற்கு சக்தி பெற்றவனாக இருக்கின்றான். உதாரணமாக ஒரு வேப்பமரத்து இலையை கண்களால் காணக்கூடிய மனிதன், அதனுடைய தன்மையை உடனடியாக புரிந்து கொள்கிறான். ஆனால் அதன் அருகில் வந்து முகர்ந்து பார்த்து அல்லது நாவால் சுவைத்து பார்த்து தான் ஒரு ஆடு அதன் தன்மையை புரிந்து கொள்கிறது. இதனால் ஆட்டிற்கு இல்லாத அதிகபட்ச அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனும் முடிவுக்கு மனிதன் வருகிறான். அது தான் பகுத்தறிவு எனப்படுகிறது.

பழைய சோறு குடிக்கும் ஊர்மக்கள்

விலங்குகளை விட மரம் செடி, கொடிகளை விட தனக்கு அதிக பலம் இருக்கிறது எனக் கூறிக்கொள்ளும் மனிதன், தன்னை விட அறிவில், ஆற்றலில் குறைந்த விலங்கினங்களும் மரம், செடி, கொடிகளும் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்யுமென்று நம்புகின்றான். அவைகள் மனிதனது பிற்காலத்தை தெரிந்து வைத்திருப்பதாக நம்புகின்றான். குறிப்பிட்ட ஒரு பொருளால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அது செய்வதாக நம்புவது மூடநம்பிக்கை எனப்படும்.

இந்த மூடநம்பிக்கைக்கு படித்தவன், பாமரன், ஆண், பெண் என் பேதமில்லாமல் பெரும்பாலானோர் அடியையாகி விடுவதை நம்மால் காண முடிகின்றது.

வீடு வீடாக பிச்சை எடுக்கும் மக்கள்

இந்த மூடநம்பிக்கைகள் பல வகைப்பட்டதாக இருந்தாலும் மழை வேண்டி செய்யும் கேலிக் கூத்துகள் தமிழகத்தில் தற்போது மிக அதிகரித்து வருகிறது.

மழையை தருவது இறைவனின் செயல் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் பருவமழை பொய்த்துவிடும் போது எப்படியாவது மழை வந்து விடாதா என மனிதன் துடிக்கின்றான். அதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகின்றான். ஒவ்வாரு இடங்களிலும் மழை வேண்டி நடத்தப்பட்ட கூத்துகள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன.

அரசுக்கும் வேம்புக்கும் திருமணம்

மழை வேண்டி சின்னகவுண்டன் பாளையத்தில், வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய சோறு மற்றும் கஞ்சிகளை பெரிய அண்டாக்களில் ஊற்றி கரைத்து குடித்துவிட்டு வாத்தியங்கள் முழங்க, ஊரின் முக்கிய வீதிகளில் முறம், சீவக்கட்டையுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் ஒப்பாரி வைத்து 'எங்களது ஊரில் மழை பெய்யவில்லை, ஊரை விட்டு வெளியே செல்வதை தடுக்க, மழை பெய்ய வேண்டும் வருண பகவானே!' என்று கூறியபடி ஊரின் எல்லையில் உள்ள மரத்தில் முறம், சீவக்கட்டை, கூடையை கட்டிவிட்டு திரும்பினார். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் எனறு இவர்கள் நம்புகிறார்கள்.

சிவகாசி அருகே ஆனைக்கூட்டம் என்ற இடத்தில் ஊர்மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று பிச்சை எடுத்தார்களாம். அவ்வாறு செய்தால் மழை வருமென்று இவர்கள் நம்புகின்றனர்.

தவளைக்கு கல்யாணம்

இன்னும் சில இடங்களில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். இப்படி ஒரு வழிபாடு நடத்துவதற்காகவே வேம்பு மற்றும் அரச மரத்தை அருகருகே வளர்த்து வருகின்றனர். இவ்விரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வந்து விடும் என்பது ஒரு சில கிராமத்தார்களின் நம்பிக்கை.

தவளைகளுக்கு திருமணம் செய்வதென்பது வருடந்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு கூத்து. இதனால் மழை வரும் என்று நம்புகிறார்கள். ஊர் கூடி, தாரை தப்பட்டை முழங்க வலம் வந்து தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு தம் கைகளில் இருப்பது ஆணும் பெண்ணும் தானா? அல்லது இரண்டும் ஆணா? அல்லது பெண்ணா என்பது கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.

கழுதைக்கு கல்யாணம்

தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதை போலவே சில இடங்களில் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் இரண்டு கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் சில இடங்களில் மனிதனுக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. ஊரார் முன்னிலையில் தாலி கட்டும் அந்த ஆண்மகனுடன் கழுதையை சீர் செனத்தி கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அந்த கழுதையை மன்னிக்கவும்! மணப்பெண்ணை தன்னுடன் அழைத்து செல்லும் மணமகன், அதனுடன் குடும்பம் நடத்துவாரா என்பது அவருக்கே வெளிச்சம்! இத்தகைய அருவருப்பான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் சில இடங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் அமர்ந்து மழைக்காக தங்கள் தங்கள் தெய்வங்களை வழிபட்டு பிரார்த்தனை புரிகின்றனர். இதில் இஸ்லாமியர்களும் அடக்கம்.

மனிதன் கல்வியில் எத்தகைய வளர்ச்சியை கண்டாலும் அவனிடத்தில் இருக்கக்கூடிய மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க முடியவில்லை. மனிதனுக்கு எத்தகைய உதவிகளையும் செய்ய இயலாத குரங்குகள், பாம்புகள் போன்றவற்றை தெய்வமாக வழிபடுகின்றான். ஆனால் அதே பாம்புகளை பிடித்து விற்று பணம் சம்பாதிக்கின்றது இன்னொரு கூட்டம்.

மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் சர்வ மதத்தினர்

ஆந்திர மாநிலம் கரீம் நகரில் உள்ள ஒரு கோவிலில் எமதர்மன் சிலை ஒன்று உள்ளது. தெலுங்கு கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் எமதர்மன் பூமிக்கு இறங்கி வருவதாகவும் அன்றைய நாட்களில் அவரை வழிபட்டால் ஆயுள் நீட்டிப்பு தருவார் என்பதும் மக்களின் (மூட) நம்பிக்கை. இதனால் பல பகுதிகளிலிருந்தும் ஆயுள் விருத்திக்காக பலரும் இங்கு வருகின்றனர். அவ்வாறு மராட்டியத்திலிருந்து ஆயுள் நீட்டிப்பு வழிபாடு நடத்த வந்தவர்கள் மீது லாரி மோதி காரில் இருந்த 8 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அவர்களது நம்பிக்கையின் படி எமதர்மன் பூமிக்கு இறங்கி வரும்போது தான் நடந்துள்ளது. தன்னை வணங்க வந்தவர்களையே எமதர்மன் கொன்றிருக்கிறான். இவ்வாறான சம்பவங்கள் நம் கண்களுக்கு முன்னால் நடந்தும் கூட மூடத்தனத்திலிருந்து விலகமறுப்பவர்களை என்னவென்று சொல்வது?

பாம்புகளை வணங்கும் மக்கள்

மனிதன் அறிவியலில் முன்னேறி சாதனை படைத்துவிட்டான், மிக விரைவில் சந்திரனில் குடியேறிவிடுவான் என கூறிக்கொண்டிருக்கும் நிலையிலும் மூடப்பழக்கங்களை ஒழிக்கமுடியவில்லை.

அறிவை சூனியமாக்கும் மூடநம்பிக்கைகளை மனிதன் கைவிட்டு பகுத்து ஆய்ந்து செயல்படுவானானால் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு புலப்படும். இஸ்லாமியர்கள் இத்தகைய பழக்கங்களில் ஈடுபடுவதில்லை என்பது சற்று நிம்மதி தரும் விஷயமாகும்.

விற்பனைக்காக கடத்தப்பட்ட பாம்புகள்

மழை வேண்டுபவர்கள் இறைத்தூதர் காட்டிய வழியில் மழைத்தொழுகை தொழுதால் இறைவன் நாடினால் மழையை தருவான் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. முஸ்லிம்கள் மழைக்காக அதை மட்டுமே செய்ய வேண்டும்.

ஆக, கழுதை, தவளை, பாம்பு, பல்லிகளை வணங்குவதாலோ கல்யாணம் செய்து வைப்பதாலோ மழை வந்துவிடப் போவதில்லை. தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பழக்கங்கள் இருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் வறட்சி ஏற்படுகின்றன, மழை பெய்கின்றன. ஆனால் அங்கு மூடத்தனங்கள் இல்லை. எனவே பகுத்தறிவு பெற்ற நாம் அறிவார்ந்த செயல்களை செய்வோமே!

நன்றி : உணர்வு

1 comment:

Anonymous said...

முகரம் பண்டிகையின் போது சாட்டையால் அடித்து உடலில் ரத்தத்தை வரவழைக்கும் செயலை என்னவென்று சற்று விளக்குங்கள் அய்யா? கா. ராஜேந்திரன்