மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.
மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது. (திருக்குர்ஆன் 2:219)
மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
நன்றி : உணர்வு
No comments:
Post a Comment