இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்காக 2500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறதென மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்திர பிரதேசம் பரூக்காபாத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் நலனில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் இதை செயல்படுத்த தன்னார்வ தொண்டர்களை அரசு நியமிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்த ராஜேந்திர சச்சார், ஆய்வின் முடிவில் மற்ற அனைத்து சமூகத்தினரையும் விட முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு வீடுகளின்றி ரோட்டோரங்களில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டது அனைவருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிலையை அவ்வபோது சுட்டிக்காட்டி 'பார்த்தீர்களா நமது நிலையை' என்று ஒவ்வொரு முஸ்லிம் அமைப்புகளும் பேசியும் எழுதியும் போராடியும் தான் வருகின்றனவே தவிர தீர்வுகள் கிடைத்த பாடில்லை.
நோன்பு நேரத்தில் இப்தார் விருந்துக்கு அரசியல்வாதிகளை அழைத்த சில முஸ்லிம் பிரமுகர்கள், ரம்ஜான் பண்டிகைக்கும் இலவச வேட்டி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களே தவிர சமுதாய முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்து போட முன்வரவில்லை.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எனும் பெயரில் செல்வந்தர்களின் கடனைக்கூட தள்ளுபடி செய்து கோடிக்கணக்கான ரூபாயை செலவிடும் அரசின் செவிகளில் முஸ்லிம்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம், வட்டியில்லா கடன் வழங்குங்கள் என்று முழங்கியபோதும் அரசு செவிசாய்க்கவில்லை.
முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற திட்டங்கள் வகுக்கப்படும் என தேர்தல் நேரங்களில் அளித்த வாக்குறுதியை கண்டு கொள்ளாமல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, 'பாம்பும் சாக வேண்டும், தடியும் முறிந்துவிடக் கூடாது' எனும் ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்தது போலவும் வெளியே தெரிய வேண்டும், ஆனால் அவர்கள் பயன்பெற்றுவிடவும் கூடாது என்பது போல இந்த திட்டத்தை அரசு அறிவித்தள்ளதாக முஸ்லிம்களிடத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த 2500 கோடி ரூபாய் என்பது ஊழியர்களை அமர்த்தி விநியோகித்தால் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட இந்த பணம் போதாது என்பது அரசுக்கே தெரியுமாதலால் தான் அதற்கு ஊழியர்களைக் கூட நியமிக்காமல் தன்னார்வ தொண்டர்கள் மூலம் அத்திட்டத்தை செயல்படுத்துகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் கூறுவதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஏனெனில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் 90 மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு இந்த 2500 கோடி ரூபாய் பயன்படப் போகிறதாம். இதனால் உத்தர பிரதேசிலுள்ள 21 மாவட்டங்கள் வளர்ச்சி பெறுமென்றும் 15 சதவிகித சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டுமென்று சல்மான் வலியுறுத்தியுள்ளாராம். இதனால் உபியில் இன்னும் 15 மாவட்டங்கள் பயன்பெறுமாம். உபியில் மட்டும் 30 மாவட்டங்கள் பயன்பெறுமாம். அப்படியானால் மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் 60 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து உதவி தொகை வழங்குவார்கள் போலும். சல்மான் குர்ஷித் உபியின் சிறுபான்மை அமைச்சரா அல்லது மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரா என நமக்கு விளங்கவில்லை. சல்மானின் கணக்குபடி உபி யின் 30 மாவட்டங்கள் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு மாவட்டங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. (நமது வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அவர்கள் முதல்வரின் நண்பர் ஆதலாலும் அவர் கூறி நமக்கு இடஒதுக்கீடு கிடைத்தது போல!? அவர் கூறினால் முதல்வர் உடனடியாக கேட்பார் என்பதாலும் மத்திய அரசு வழங்கும் இத்திட்டத்தினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பயன்பெற வாய்ப்புண்டு!?).
அத்துடன் இந்த உதவித் தொகை முஸ்லிம்களுக்கு மட்டும் என ஒதுக்கப்படவில்லை. மாறாக சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்றே ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் என வரும்போது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என இன்னும் ஏராளமானோர் இடம் பெறுவர். அந்த வகையில் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறாமல் போகாது.
90 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதானால் மொத்தத்தில் மூன்று மாநிலங்களுக்கு மேல் பயன்பெற முடியாது. அதிலும் பல லட்சம் சிறுபான்மையினரை கொண்டுள்ள மாவட்டங்களில் சில கோடி ரூபாயைக் கொண்டு எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்திட முடியாது.
மாயாவதியின் சிலையை மாநிலம் முழுவதும் நிறுவுவதற்காக பல்லாயிரம் கோடி அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் சிரமப்படும் சிறுபான்மையினரின் நலனுக்காக 2500 கோடி மட்டும் செலவிடுவது நகைப்பிற்குரியதே.
2011ல் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டிற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்காக மட்டும் 170 கோடி ரூபாயில் சீரமைக்கபடுகிறதாம்.
சத்துணவில் வழங்கப் படும் முட்டைக்காக மட்டும் தமிழக அரசால் 2ஆயிரத்து 800 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மாநில அரசு முட்டைக்காக 2800 கோடிகளை செலவிடும் போது, விளையாட்டிற்காக பல கோடிகளை செலவிடும் போது இந்தியாவிலுள்ள ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த 2500 கோடிகளை செலவிடுவதால் எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை. இது கண் துடைப்பு நாடகமே.
இத்திட்டம் காங்கிரஸ் அரசின் சாதனைப்பட்டியலில் இடம் பெறுமே ஒழிய சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இதனால் கடுகளவும் பயனில்லை என்பது தான் உண்மை.
நன்றி : உணர்வு
No comments:
Post a Comment