Thursday, October 8, 2009

மாவீரனுக்கு விடுதலை!


காலில் கிடக்கும் ஒரு செருப்பு கூட ஒரு சாம்ராஜ்யத்தை தகர்க்கும் ஆயுதம் என நிருபித்து, ஜார்ஜ் புஷ்ஷின் பிரியாவிடை பரிசாக செருப்படி கொடுத்த முன்தாதிர் ஜெய்தி கடந்த வாரம் விடுதலை பெற்றுள்ளார். அவருக்கு 15 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அவருக்கு மாறுகால் மாறு கை வாங்கப் பட்டுவிட்டது என்றும் வந்த வதந்திகளுக்கு மத்தியில் அவ்வீரன் விடுதலை பெற்றுள்ளான். அவர் போலீஸ் மற்றும் ராணுவத்தால் கடுமையான துன்புறுத்தலுக்குள்ளானார் என்று செய்திகள் வெளியானாலும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் நேரிலும் இலட்சக்கணக்கான மக்கள் இதயத்தாலும் அவரை வரவேற்ற போது பட்ட துயரங்கள் எதுவும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திடவில்லை என்பதை உணர முடிந்தது.


யார் என்ன சொன்னாலும் நான் செய்தது சரியானதே! என்னால் முடிந்ததை நான் செய்தேன், ஈராக்கில் கணவனையும் குழந்தைகளையும் இழந்து தவிக்கும் தாய்மார்களின் பிரதிபலிப்பை தான் நான் எதிரொலித்தேன்' உடைந்த பல்லுகளுடன் வெளிவந்த முன்தாதிர் ஜெய்தி கூறிய வாக்குகள் இவை. அவருடைய பற்கள் உடைந்திருக்கலாம், ஆனால் ஜார்ஜ் புஷ்ஷோ என்றென்றைக்கும் தலைநிமிர முடியாத அளவிற்கு அவமானத்தை பெற்றுக்கொண்டாரல்லவா அதற்கு முன் இது சாதாரணமே! ஏனென்றால் தன்னால் இயலவில்லையே என ஏங்கும் உலக மக்களின் முன்னால் இன்று இவர் ஒரு ஹீரோ.

நான் ஆவேசத்தால் அதை செய்துவிடவில்லை. உலக மனச்சாட்சிக்கு முன்னால் நான் வைத்த கேள்விகள் அவை. இன்று ஈராக் சின்னாபின்ன மாக்கப்பட்டு விட்டது. சதாம் உசேன் காலத்தில் இந்நாடு இவ்வாறு இருக்கவில்லை. கடுமையான யுத்த குற்றங்கள் நடக்கின்றன. 2007 கணக்கின் படி 12 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவும் கூட்டு நாடுகளும் உலக அனுமதியுடன் நடத்திய வேட்டையில் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அப்பாவிகள் குரூரமாக கொல்லப்படுகின்றனர். உலக நாகரீகத்தின் முன்னோடியாக திகழ்ந்த ஈராக் இன்று ஒரு சவக்கிடங்கு. ஈராக் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானும் அப்படித்தான். அமெரிக்காவுக்கு 40 நாடுகளில் 865 இராணுவ தளங்கள் எதற்காக? 46 நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் வெவ்வேறு காரணங்களைக் கூறி நுழைந்திருப்பது எதற்காக? வருடந்தோறும் இருபத்தைந்தாயிரம் கோடி டாலர் செலவு செய்து பூமி முழுவதும் இராணுவத்தை அனுப்புவது எதற்காக? முன்தாதிர் விடை தேடும் கேள்விகள் இவை.

ஆயுத வியாபாரமும் இனவெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட இந்த சிறுபான்மையினர் உலகையே அடக்கிஆளும் போது அவற்றை எதிர்ப்பது முன்தாதிர் ஜெய்தி எறிந்தது போன்ற ஷூக்கள் மட்டுமே. அவருக்கு இருந்த துணிச்சல் மற்றும் தைரியத்தில் பத்திலொரு பங்கேனும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இன்று இவ்வுலகு இரத்தக்காடாக மாறியிராது. அனுபவம் ஆட்சியாளர்களை திருத்த வேண்டும். இல்லையேல் அக்கிரமமே கோலோச்சும்.

நன்றி : உணர்வு

No comments: