Wednesday, October 28, 2009

உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக...




தொலைக்காட்சிக்கு கட்டுப்பாடுகள் வேண்டுமென்று உலகெங்கிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஏனெனில் சினிமாவுக்கு தணிக்கைத்துறை இருப்பது போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய தனியாக துறை எதுவும் அரசால் ஏற்படுத்தப் படவில்லை. (தமிழக தணிக்கை துறை செயலிழந்து போயிருப்பது தனி விஷயம்) அதன் காரணமாக நிகழ்ச்சிகளுக்கு மெருகேற்றவும் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் தருகிறோம் எனும் பெயரிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. தனிநபர் தாக்குதல், நகைச்சுவை எனும் பெயரில் தன்மானத்துக்கு பங்கம் விளைவித்தல் போன்றவற்றோடு ஆபாசங்களை திணித்தல் ஆகியவை கட்டுப்பாடின்றி அரங்கேறி வருகின்றன. சினிமா, அரைகுறை ஆடையுடன் கூடிய பாடல்கள், வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாசக் காட்சிகளை அரங்கேற்றி வரும் தொலைக்காட்சிகள் அதைவிட மோசமாக என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றன.


இந்தியா போன்ற கட்டுப்பாடற்ற நாடுகளில் எதுவும் செய்ய இயலாமல் போனாலும் இதை அடியோடு ஒழித்துக் கட்ட சவுதி அரேபியா அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

லெபனான் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் எல்.பி.சி (டு.டீ.ஊ) தொலைக்காட்சியில் 'போல்டு ரெட் லைன்' என்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. திருமணத்திற்கு முன் பின் செய்யும் அந்தரங்க செயல்களை பகிரங்கப்படுத்துவது தான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதில் கலந்து கொண்ட மாசின் அப்துல் ஜவாத் எனும் சவுதி அரேபியாவைச் சார்ந்த இளைஞன், தான் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறான், எத்தனை பெண்களை கற்பழித்திருக்கிறான், எத்தனை பெண்களை விபச்சாரம் செய்திருக்கிறான் என்பதை பகிரங்கப்படுத்தியதைக் கண்டு அரபுலகமே அதிர்ச்சியுற்றது. பெண்களை எப்படி தன் வலையில் வீழ்த்துவது என்பதையும் அந்த நிகழ்ச்சியில் அவன் சொல்கிறானாம். நண்பர்களின் துணையுடன் அவன் செய்த செயல்களையெல்லாம் கேட்டு அரபுலகம் கொதித்தெழுந்தது.

சவுதி அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்து மாசின் அப்துல் ஜவாத் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த கொடிய செயலுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் முடிவு கட்டும் வகையில் மாசினுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் 1000 சாட்டையடியும் விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியது. அவனது இரண்டு நண்பர்களுக்கும் தலா இரண்டு வருடங்கள் சிறையும் 300 சாட்டையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புகள் அரபுலகு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த இளைஞன் தனது குடும்பத்தை சார்ந்த பெண்களுடனும் திருமண ஆசை கூறியும் தான் ஏமாற்றியுள்ளான். இதை ஒரு பாடமாகக் கொண்டு அந்நிய ஆண்களிடத்தில் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டுமென்றும் பெற்றோர் தங்கள் பெண்களை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டுமென்றும் அரபிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்ததாக சவுதி அரசு, தவறு செய்த இளைஞனுக்கு மட்டும் தண்டனை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த நிகழ்ச்சியை தொகுத்தவர் முதல் காமிராமேன் வரை அனைவருக்கும் தண்டனை வழங்கியது சிறப்பாக கருதப்படுகிறது. சமுதாயத்தை சீரழித்து ஒழுக்கக்கேட்டை புகுத்தும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சவுதி பெண்ணான, நிகழ்ச்சியின் கோ-ஆர்டினேட்டர் ரோஸானா அல்யாமி என்பவருக்கு, வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகவில்லை. மாசின் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்த பிறகே ரோஸானா ஆஜரானார். அப்போது அப்பெண்ணுக்கு 60 சாட்டையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் நீண்ட விசாரணைக்கு பின் ஜித்தா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் காமராமேனுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரையறை வேண்டும். யாரும் எதையும் செய்து விடலாம், சொல்லி விடலாம் எனும் போங்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ள ஒரு வியாதியாகும். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் அல்லது வன்முறையை உருவாக்கும் செய்திகளை அல்லது நிகழ்ச்சிகளை கண்டிக்கும் போது அதை பத்திரிகை சுதந்திரம் எனக் கூறி அதை நியாயப்படுத்துபவருக்கு சவுதி அரேபியா சரியான பாடம் கற்பித்துள்ளது. இந்த தீர்ப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் தொலைக்காட்சிகளை ஆளும் அரசுகள் கட்டுக்குள் கொண்டுவருமானால் வன்முறையும் ஆபாசமும் விலகி சமுதாயம் சீர் பெறும்.

ed;wp : czh;T

No comments: