Friday, September 25, 2009

சுதந்திரதின தீவிரவாதிகள்!?

சுதந்திர தினத்தை காரணம் காட்டி 10 வருடங்களாக டெல்லி போலீஸாரால் தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட குற்றவாளி என்று நிரூபிக்கபடவில்லை எனும் அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.

'த டெலகிராஃப்' பத்திரிகையின் டெல்லி நிருபரான அனந்த்யா சென்குப்தா என்பவர் டெல்லி போலீஸின் தீவிரவாத வேட்டையை அம்பலப்படுத்தியுள்ளார். சுதந்திரதினத்தன்று தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் என்று கூறி 2000ம் ஆண்டு ஜனவரி 24 முதல் டெல்லி போலீஸ் கைது செய்த தீவிரவாதிகள் பற்றி விசாரித்த போது இத்தகவல் வெளியானது.



2003 ஆகஸ்ட் 10ம் தேதியன்று ஆயுதமேந்திய லக்சரே தய்யிபா தீவிரவாதிகள் என்று கூறி கைது செய்து இன்று வரை தீஹார் ஜெயிலில் இருக்கும் அல்தாப் ஹூசைன், அல்தாப் அஹமது, 2004 ஆகஸ்ட் 16ல் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட சைனீஸ் பிஸ்டலுடன் வந்ததாக போலீஸார் கூறிய லக்சர் தீவிரவாதி, 2005 ஜூலையில் நடுங்க வைக்கும் சதித்திட்டங்களுடன் வந்ததாக மொபைல் போணுடன் கைது செய்யப்பட்ட தீஹார் ஜெயிலில் இருக்கும் மூன்று பேர், 2006 ஆகஸ்ட் 10 ல் வெடிபொருட்களுடன் வந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இரண்டு லக்சர் தீவிரவாதிகள், 2007 ஜூலை 28 ல் லக்சரின் திட்டங்களுடன் வந்ததாக கூறி கைது செய்து தீஹார் ஜெயிலில் அடைக்கப்பட்ட சபீர் அஹமது லோன், 2008 ஜூலை 29 ல் டெல்லியை தாக்க வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டை சார்ந்த முஹம்மது ஹக்கீம் ஆகியோர் சுதந்திர தின தாக்குதல் திட்டத்துடன் வந்ததாக கூறி போலீஸால் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்கள். ஆனால் இன்று வரை எந்த குற்றமும் நிரூபிக்கப்படாதவர்கள் என்று அனந்த்யா கண்டறிந்துள்ளார். வருடந்தோறும் நீளுகின்ற பட்டியலில் இடம் பிடிக்க டெல்லி போலீஸூக்கு இந்த வருடமும் இருவர் கிடைத்துள்ளனர்.

ஜாவேத் அஹமது மற்றும் ஆஷிக் அலி ஆகியோர் காரில் இரண்டு லாண்ட் கிரானைடு, ஏ.கே 47 துப்பாக்கிகள் 120 புல்லட்டுகள் சகிதம் ஒரு பார்க்கிங் ஏரியாவில் பிடிக்கப்பட்டதாக கதை புனையப்பட்டது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் சீஃப் ஸய்யித் ஸலாஹூதீனின் கட்டளைப்படி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் டெல்லி போலீஸார் கூறியிருந்தனர். தீவிரவாதிகளென்று முத்திரை குத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்N;டாரின் வழக்குகளை நடத்தும் சன்வர்கான் எனும் வக்கீலின் வார்த்தைகளை அனந்த்யா சுட்டிக்காட்டுகிறார்.

டெல்லிக்கு வரும் காஷ்மீரிகளை டெல்லி போலீஸ் பின் தொடர்ந்து சென்று அவர்களை ரயில்வே ஸ்டேசனிலோ பஸ் ஸ்டாண்டிலோ வைத்து பிடித்து செல்கின்றது. அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அழைத்து செல்வதை உறவினர்களுக்கு கூட தெரிவிக்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்கிறது. பின்னர் குடியரசு தினம் அல்லது சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறி ஆஜர்படுத்துகின்றது.

காணாமல் போனதாக உறவினர்கள் போலீஸில் புகார் செய்துள்ள காஷ்மீர் இளைஞர்களை போலீஸ் இவ்வாறு பிடித்து சிறையிலடைத்த சம்பவம் தனக்கு தெரியுமென்று கான் கூறுகின்றார். புகார் தெரிவித்துள்ள இளைஞர்கள் தங்கள் கஸ்டடியில் தான் இருக்கின்றனர் என்ற எந்த விபரத்தையும் போலீஸ் உறவினர்களுக்கு தெரிவிப்பதில்லை.

பனிஹனில் பிரதேசத்தை சார்ந்த காஷ்மீரி முஹம்மது அமீன் வானியை 2006 டிசம்பரில் காஷ்மீரின் கத்வாயில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். டெல்லி லோடி காலணியில் ஒரு வீட்டில் மறைத்து வைத்திருந்த வானியுடன் பின்னர் ஒரு பங்களாதேசியையும் அடைத்தனர். தேவ்பந்தில் தாருல் உலூமில் படிப்பதற்காக வந்த லுத்புர் ரஹ்மான் என்ற பங்களாதேஷ் மாணவர் தான் அவர். எட்டு மாதங்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்திலிருந்து கஸ்டடியிலெடுத்து ரகசிய பிரிவில் அவனை ஒப்படைத்தனர். பின்னர் பாகிஸ்தான் தொடர்புள்ள தீவிரவாதி என்று முத்திரை குத்தி வெடிகுண்டு வழக்கில் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர். அவ்விருவரும் தற்போது தீஹார் ஜெயிலில் மூன்றாம் நம்பர் செல்லில் கிடப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அரசு தரும் பணமுடிப்புகளும் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வும் பரிந்துரையும் போலீஸ் இத்தகைய வேட்டைகளில் இறங்க தூண்டுகோலாக அமைகின்றன என கான் குறிப்பிடுகிறார். அரசு வழங்கும் சில சலுகைகளுக்காக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதும் என் கவுண்டர் எனும் பெயரில் சுட்டுத்தள்ளுவதும் தொடர் கதையாகி வருகின்றது. சுதந்திர தினம் என்றாலே கோவிலுக்கு பாதுகாப்பு வழங்கி முஸ்லிம்களை திவிரவாதிகளாக சித்தரிக்கும் செயலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. பாட்லா சம்பவத்தில் ஊர் மக்களும் மனித உரிமை அமைப்புகளும் களமிறங்கி போலீஸ் நடத்திய என்கவுண்டர் பொய்யானது என பல்முனை போராட்டங்களை நடத்திய பிறகும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது தன்னை கேள்வி கேட்க யாருமில்லை என்ற இறுமாப்பை காட்டுகின்றது. இனிவரும் காலங்களில் இது தடுக்கப்படவில்லையென்றால் ஒவ்வொரு வீட்டிலும் போலீஸ்காரர்களால் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகிறான் எனும் சொல் இந்திய சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடும்.

நன்றி : உணர்வு

No comments: