சட்டத்துறை ஆணைய தலைவர் ஏ.ஆர்.லட்சுமணன், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் வாகன விபத்து தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் தற்போதைய இந்திய தண்டனை சட்டம் 304(ஏ)ல் திருத்தம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென்று சட்டத்துறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மது அருந்தும் வாகன ஓட்டிகளால் மட்டும் பிறருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மது என்பது வீட்டை, நாட்டை அழிக்கும் அரக்கன் என்பதும் ஆனால் அதற்கு எதிர்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்கு சென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம் கண்டு வருகின்றோம். சில மாதங்களுக்கு முன் சரக்கு ரயில் வண்டியின் மேற்கூரையில் மின்சார ஒயரை பிடித்ததால் உடல் கருகிய ஒருவரிடம் போலீஸ் விசாரித்த போது மது அருந்திய போதையில் லாரி என நினைத்து ரயில்வண்டியின் மேற்கூரையில் ஏறியதாக அவர் குறிப்பிட்டார். போதை தலைக்கேறி பெத்த மகளை படுக்கைக்கு அழைத்த கொடுஞ்சம்பவங்களும் நடந்துள்ளன.
ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மது அருந்திவிட்டு வாகனம் மட்டும் ஓட்டக்கூடாது என்பது மட்டும் என்ன நியாயம்?
மக்களை காக்க வேண்டிய அரசின் திட்டங்களில் பெரும்பாலானவை கேலிக்குரியதாகவே இருக்கின்றன.
எயிட்ஸை தடுத்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே ஊர் முழுவதும் ஆணுறை இயந்திரங்களை நிறுவி விநியோகித்தும் வருகின்றது.
'குடி, குடியை கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் அது தடுக்கப்பட்டு விடுமா? எப்படியாவது கஜானாவை நிரப்ப வேண்டுமென்று அரசு மக்களை மடையர்களாக்குகின்றது.
இப்படியே போனால் திருடுவது தவறு என்ற வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை அரசு விநியோகித்து விட்டு திருடுவதற்காக அரசே பயிற்சி பள்ளிகளை துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவற்றிற்கெல்லாம் காரணம் கஜானா நிரம்ப வேண்டும் என்பது தான். டாஸ்மாக் கடைகளில் 2007 - 08 ம் ஆண்டு மூன்று கோடியே ஆறு லட்சத்து 24 ஆயிரம் பெட்டிகள் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது. இது 2008-09 ஆண்டில் மூன்று கோடியே 55 லட்சத்து 28 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. இதே போல் 2007-08 ஆண்டு ஒரு கோடியே 96 லட்சத்து 36 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையானது. இது 2008-09 ம் ஆண்டில் இரண்டு கோடியே 23 லட்சத்து 72 ஆயிரம் பெட்டிகளாக அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு கிடைத்த வருவாய் 10 ஆயிரத்து 601 கோடியே 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2007-08 ம் ஆண்டில் 8 ஆயிரத்து 821 கோடியே 16 லட்சம் ரூபாயாக இருந்தது.
வருமானத்திற்காக மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் அரசு, பாதிப்புகளை உணர மறுக்கிறது அல்லது மறைக்கிறது. காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமுலில் உள்ளது என மக்கள் நம்பி இருக்க, கள்ளச்சாராயத்தை குடித்து நூற்றுக்கணக்கானோர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்குவதாக இருந்தது.
அவ்வபோது கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை காவல்துறை கைது செய்ததாக நம்மால் பத்திரிகைகளில் பார்க்க முடியும். மக்கள் மீது அக்கறை கொண்டா அரசு இதை செய்கின்றது? இல்லை. தனியார் சாராயம் காய்ச்சும்போது அரசுக்கு வருமானம் கிடைக்காது என்பதால் அது கள்ள சாராயமாம். அரசே காய்ச்சி விற்பனை செய்வதால் அது நல்ல சாராயமாம்.
தமிழகத்தில் ஆறு சாராய தொழிற்சாலைகள் உள்ளன. மூன்று பீர் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது கூடுதலாக மூன்று பீர் தொழிற்சாலை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் ஆறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி தர கேபினட் காத்திருக்கிறது. இந்நிலையில் கள் இறக்க அனுமதி வேண்டுமென்று போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இதுநாள்வரை பூரண மதுவிலக்கு வேண்டுமென்று கூறிவந்த பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது தனது சுயநலத்துக்காக கள் இறக்க அனுமதி வேண்டும், கள் இறக்க நான் ஆதரவு தருகிறேன் என்று அறிவித்து விட்டார். பனை, தென்னை விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக கள் இறக்குவதை அனுமதிக்க வேண்டும் என்றும் கள்ளை உணவு பொருளாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவும் தனது செயற்குழுவில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஓட்டு வங்கிக்காக அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
டாஸ்மாக் சாராயத்தில் 42.8 சதவீதம் ஆல்கஹால் இருப்பதால் அதிக போதை தரும். ஆனால் கள்ளில் 4.5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் உள்ளது. இதனால் பாதிப்புகள் இல்லை என்பது சிலரின் கருத்து. சாராயம் குடித்ததால் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் கள் குடித்து இறந்தனர் என்று செய்திகள் வரவில்லை என்பதும் சிலரின் வாதம். ஆனால் கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள் குடித்ததன் மூலமாக 200 க்கும் மேற்பட்டோர் மயங்கி சரிய, பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதையும் பொய்யாக்கிவிட்டது.
மக்கள் மீது அக்கறை காட்டுவது போல், விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் அறிக்கை விடுகின்றன. விவசாயிகளின் வறுமையைப் போக்க மாற்றுவழிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வறுமையால் தான் திருடுகின்றனர் என்பதற்காக பிக்பாக்கெட்டை எவ்வாறு அனுமதிக்க முடியாதோ, பசியால் தான் பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதற்காக எவ்வாறு விபச்சாரத்தை அனுமதிக்க முடியாதோ அதுபோலத்தான் பிறருக்கு கெடுதியை தரும் போதை வஸ்துக்களுக்கும் அனுமதி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. டாஸ்மாக் மூலமாக தமிழகமே போதையில் தள்ளாடுகிறபோது கள் இறக்குவதற்கு அனுமதி தருவதால் மட்டும் என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்பது தான் பெரும்பாலானோரின் (அரசியல்வாதிகளின்) பேச்சாக இருக்கின்றது. தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்க நினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. பக்தியோடு செல்லும் கோவிலுக்கு கூட போதை பொருட்கள் காணிக்கையாக வழங்கப் படுகின்றன. பத்து லிட்டர் கள்ளும் ஒரு லிட்டர் ஸ்காட்ச் விஸ்கியும் ஒரு கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளாராம். டீ குடித்தால் தான் வேலை ஓடும் என்றிருந்த காலம் போய் ஒரு பெக் போட்டால் தான் ஐடியா வரும் எனும் நிலைக்கு இன்று சமூகம் தள்ளப்பட்டுவிட்டது. வரிசையில் நின்று பாட்டில் வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாற ஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதிய மதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின் நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும் அதை தடை செய்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது வேதனைக்குரிய செயலாகும். புகையை தாராளமாக்கி விட்டு பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பதாலோ மதுவை தாராளமாக்கிவிட்டு மது அருந்தி வண்டி ஓட்டாதீர் என்பதாலோ போலீஸ்காரர்களின் பாக்கெட் நிறையுமேயன்றி மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை.
நாட்டு மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். அப்போது தான் ஏழைகளின் வறுமை ஒழியும், குழந்தைகளின் கல்வி வளரும், நாடும் ஒளிரும்.
நன்றி : உணர்வு
No comments:
Post a Comment